Our Feeds


Wednesday, July 29, 2026

ShortNews

பௌதிக வளர்ச்சி மட்டும் நாட்டின் உண்மையான வளர்ச்சியல்ல - பிரதமர்!


பௌதிக வளர்ச்சி எவ்வளவு தூரம் இடம்பெற்றாலும், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலேயே அளவிடப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

களுத்துறை தெற்கு, ரெமுணகொட, கோன்கொட ஸ்ரீ கங்காராம புராண மகா விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட உலோக சமாதி புத்தர் சிலையைத் திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.


தற்போதைய வேகமான மற்றும் சிக்கலான சமூகச் சூழலில் மக்களின் மனங்களுக்கு அமைதியும் ஆன்மீகச் சாந்தியும் மிகவும் அவசியமானது எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், கோன்கொட ஸ்ரீ கங்காராம புராண மகா விகாரை வளாகத்தில் இவ்வாறான கலைநயமிக்க சமாதி புத்தர் சிலையைத் திறந்து வைப்பது, முழுப் பிரதேசத்தின் பௌத்த மக்களின் ஆன்மீகச் சுகவாழ்விற்காக ஆற்றப்படும் மகத்தான சேவையாகும் என்றும் தெரிவித்தார்.

பிரதேச மக்களிடம் இருந்த உலோகங்களைப் பயன்படுத்தி இந்தச் சிலையை உருவாக்கியமையும் பாராட்டிப் போற்றப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என அவர் கூறினார்.

நாட்டின் வரலாற்று, மத மற்றும் கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதும் விகாரைகளை அபிவிருத்தி செய்வதும் அரசாங்கத்திற்குப் பாரிய பொறுப்பாக சாட்டப்பட்டுள்ளதாகவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக புத்தசாசன அமைச்சு மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஊடாக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

தீவு முழுவதும் அமைந்துள்ள புராதன விகாரைகளின் பழமையான சுவரோவியங்கள், கல்வெட்டுகள் மற்றும் தூபிகளைப் பாதுகாப்பதற்கான பல நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கஷ்டப் பிரதேசங்களில் உள்ள விகாரைகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இளம் தலைமுறைக்கு வரலாற்றுப் பாரம்பரியங்கள் குறித்த சரியான புரிதலை வழங்குவதும், தொல்பொருள் இடங்களைப் பாதுகாத்து அவற்றை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக மாற்றுவதும் முக்கியமானது என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க விகாரைகளைப் பாதுகாப்பது என்பது வெறும் கட்டிடங்களைப் பராமரிப்பது மட்டுமல்ல, தேசிய அடையாளம், ஒழுக்கநெறி அடிப்படை மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பாகக் கையளிப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பௌதிக வளங்களினாலும் ஆன்மீக நற்பண்புகளினாலும் போஷிக்கப்பட்ட சுதந்திரமான, நியாயமான மற்றும் சகவாழ்வு நிறைந்த இலங்கைச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »