Our Feeds


Thursday, July 2, 2026

Zameera

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்


 ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார். 


நேற்று (01) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விதானாரச்சியுடன், இலங்கை விமானப்படை மற்றும் கடற்படையை பிரதிநிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் இந்த வரவேற்பு வழங்கப்பட்டது. 


6 ஆவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடல் நாளை (03) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. 


இந்த உயர்மட்ட இருதரப்பு கலந்துரையாடலின் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும், பிராந்திய பாதுகாப்பு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சிகள் மற்றும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளிட்ட பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


இதேவேளை, இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது அலி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்பு பிரதி அமைச்சர் (ஓய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »