அரசாங்கத்துக்கு தைரியம் இருந்தால் உடனடியாக மாகாண
சபைத் தேர்தலை நடத்தி மக்களின் உண்மையான செல்வாக்கை பரிசீலித்து பார்க்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க சுட்டிக்காட்டினார்.கொழும்பில் சனிக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமானது தேர்தல்களை நடத்தாமல் வெறும் போலிப் பிரசாரங்களை முன்னெடுத்து காலத்தைக் கடத்தி வருகின்றது. தற்போதைய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் காணப்படும் 159 ஆசனங்கள் கொண்ட பெரும்பான்மை பலம் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட வாக்கு முடிவாகும். ஆனால், இன்றைக்கு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதான செல்வாக்கு முற்றிலும் சரிவடைந்துள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது. ஊவா மாகாணத்தில் அநுர குமார திசாநாயக்கவுக்கு பெரும் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டாலும், சமந்த வித்யாரத்ன உள்ளிட்ட ஆளும்தரப்பு தலைவர்களுக்கு தைரியம் இருந்தால் பதவிகளைத் துறந்து மீண்டும் தேர்தலில் போட்டியிட முன்வர வேண்டும். தேர்தல் நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையான மக்கள் ஆதரவு யாருக்கு உள்ளது என்பது தெளிவாகும்.
கடந்த காலங்களில் பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் போது கணிசமாகக் குறைந்துள்ளன. எனவே, பொய்களைக் கூறிக்கொண்டு தேர்தலைத் தட்டிக்கழிக்காமல் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். எந்தவொரு தருணத்திலும் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள நாம் முழுமையாகத் தயாராகவே உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
