Our Feeds


Thursday, July 2, 2026

Zameera

ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி இல்லை


ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். 

தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 

போரினால் தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் ஈரானின் ஃபோர்டோ, நடன்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய பகுதிகளில் உள்ள அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகம் அனுமதி பெற்றுள்ளதாக தகவல்கள் வௌியாகியிருந்தன. 

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து வௌியிட்டுள்ள ஈரான் பாராளுமன்ற சபாநாயகர், தற்போது ஆய்வாளர்களுக்கு புஷெர் மின்நிலையம் மற்றும் தெஹ்ரான் உலை ஆகிய இரு இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இத்தகைய அணுசக்தி நிலைய ஆய்வுகளுக்கான அணுகலைத் தடை செய்யும் சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாகவும் காலிபாஃப் தெரிவித்தார். 

பாராளுமன்றமே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதுடன், அதி உயர் தேசிய பாதுகாப்பு சபையும் இதற்கு இணையான தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளதாக அவர் கூறினார். 

ஈரான்-அமெரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், ஈரான் அணுசக்தி நிலையங்களை IAEA ஆய்வாளர்கள் அணுகி ஆய்வு செய்ய வேண்டும் என்று அதன் தலைவர் ரஃபேல் குரோசி கூறியதைத் தொடர்ந்தே காலிபாஃப்பின் இந்தக் கருத்துக்கள் வெளிவந்துள்ளன. 

நாங்கள் விரைவில் அங்கு செல்வோம் என்று நம்புகிறோம் எனவும் ரஃபேல் குரோசி குறிப்பிட்டிருந்தார்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »