Our Feeds


Tuesday, July 21, 2026

Admin

ஸ்பெயின் - ஆர்ஜென்டினா வீரர்கள் மோதல் - FIFA விசாரணைக்கு உத்தரவு!


உலகக்கிண்ணக் கால்பந்து இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, மைதானத்தில் இரு அணி வீரர்களிடையே கடுமையான மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் பிபா விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

போட்டிக்குப் பின் நடைபெற்ற விதிமீறல்கள் மற்றும் கைகலப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்க பிபா வழக்கறிஞர் மற்றும் ஒழுங்குமுறைக் குழுவை நியமித்துள்ளது.

ஸ்பெயின் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது ஆர்ஜென்டினா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ், ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியபோது, இதைத் தடுக்க வந்த மாற்று வீரர் கேவி-யையும் அவர் கீழே தள்ளிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

அத்துடன், வெற்றியை க் கொண்டாட ஓடி வந்த ஸ்பெயின் அணியின் தலைவர் ரோட்ரியின் வயிற்றில் ஆர்ஜென்டினாவின் தடுப்பாட்ட வீரர் நஹூயல் மொலினா தாக்கியதைத் தொடர்ந்து, மான்செஸ்டர் சிட்டி அணியில் தன்னுடன் விளையாடிய ஆர்ஜென்டினா வீரர் நிக்கோலஸ் ஒட்டமெண்டியுடன் ரோட்ரி காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

எவ்வாராயினும், ஆர்ஜென்டினா பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி மற்றும் பிற வீரர்கள் உடனடியாக தலையிட்டு நிலைமையைச் சமாதானப்படுத்தியுள்ளனர்.

அத்துடன், வெற்றி பெற்ற ஸ்பெயின் அணி கிண்ணத்தை உயர்த்தியபோது, ஆர்ஜென்டினா வீரர்கள் மேடைக்கு முதுகைக் காட்டியபடி நின்றது சாம்பியன் அணிக்கு அவமரியாதை செய்வதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஆட்டத்திற்குப் பின் பரேடெஸுக்கு நேரடியாகச் சிவப்பு அட்டை காட்டப்படாததால், ஆரம்ப கட்ட அறிக்கையில் அவரது பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை. விசாரணைக்கான கால அவகாசம் குறித்து பிபா இன்னும் அறிவிக்கவில்லை.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »