Our Feeds


Wednesday, August 19, 2026

ShortNews

அதாவுல்லா அஹமட் சக்கி செப்டெம்பர் 1ஆம் தேதி வரை விளக்கமறியலில்!


அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாவுல்லா அஹமட் சக்கி செப்டெம்பர் 1ஆம் தேதி வரை விளக்கமறியலில்!

2021ஆம் ஆண்டு காலப்பகுதியில், அக்கரைப்பற்று மாநகர சபையில் அலுவலகத்தில் பணியாற்றிய பாத்திமா நுஷைபா என்ற பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், அதன் பின்னர் அவரைத் தொடர்ச்சியாக மிரட்டி, நீண்டகாலமாக பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில், அக்கரைப்பற்று முன்னாள் மேயர் அதாவுல்லா அஹமட் சக்கி அவர்கள் செப்டெம்பர் 1ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அம்முறைப்பாட்டைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பான பி அறிக்கை (B Report) அம்பாறை பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதாவுல்லா அஹமட் சக்கி அவர்கள் சுமார் இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில், அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி விண்ணப்பம் ஒன்றையும் அவர் தாக்கல் செய்திருந்தார். எனினும், குறித்த முன்பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கெதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு விண்ணப்பம் ஒன்றையுக்  தாக்கல் செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி அதாவுல்லா அஹமட் சக்கி அவர்கள் அம்பாறை பொலிஸில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, அன்றைய தினம் மாலை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவர் சார்பில் பல சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான அவர்களும் ஆஜராகி, சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலிப்பதற்காக, அவரை ஒரு நாள் விளக்கமறியலில் வைக்குமாறு கௌரவ நீதவான் அவர்கள் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான் அவர்களுடன் பல சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தனர்.

அதேவேளை, பாதிக்கப்பட்ட பெண்ணான பாத்திமா நுஷைபா அவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன், அவரது சார்பில் சட்டத்தரணிகளான ஜாபிர் றாசி முஹம்மட், இஷார்தீன், ஜெகசுதன், அனுஜா,மிதுர்ஷிகா மற்றும் சிறீன் மற்றும் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர் சார்பில் முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்த சட்டத்தரணி ஜாபிர் ராஸி முஹம்மத் அவர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணின் தற்போதைய நிலைமை தொடர்பாக நீதிமன்றத்திற்கு விரிவாக விளக்கியிருந்தார்.

இரு தரப்பினரும் முன்வைத்த சமர்ப்பணங்களையும், சந்தேகநபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களையும் பரிசீலித்த கௌரவ நீதவான் அவர்கள், சந்தேகநபரான அதாவுல்லா அஹமட் சக்கி அவர்களை எதிர்வரும் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »