Our Feeds


Monday, August 31, 2026

Zameera

ஜப்பானிலிருந்து 250-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள், முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை


 ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால நட்புறவைப் புதுப்பிக்கும் நோக்கில், 250-க்கும் மேற்பட்ட ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்கிய குழுவினர் முதன்முறையாக நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.


நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 4:30 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகரிலிருந்து புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான யூஎல் 455 விமானம் மூலம் இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.


நாட்டை வந்தடைந்த ஜப்பானிய விருந்தினர்களை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துப் பிரதி அமைச்சர்  ஜனித் ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம்  கேப்டன் தமிந்த ரம்புக்கவெல்ல  ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.


ஒரே விமானத்தில் இத்தனை பெரிய அளவிலான ஜப்பானியப் பயணிகள் குழு நாட்டுக்கு வருகை தந்துள்ளமை, நாட்டின் சுற்றுலாத் துறை மற்றும் முதலீட்டுத் துறையின் மீட்சிக்கான சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.  



நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்த ஜப்பானியக் குழுவினர் சிகிரியா உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடவும், ஆயுர்வேத சிகிச்சை முறைகளை அனுபவிக்கவும், நாட்டின் வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும் திட்டமிட்டுள்ளனர்.  தங்களது இலங்கை விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இக்குழுவினர் செப்டம்பர் 04 ஆம் திகதி மீண்டும் ஜப்பானுக்கு புறப்படவுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »