Our Feeds


Friday, August 14, 2026

SHAHNI RAMEES

A/L எழுத சென்ற பாடசாலை மாணவிகளின் ஹிஜாபை பலவந்தமாக அகற்ற முயற்சித்த பரீட்சை மேற்பார்வையாளர்!

 


"அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில்

மீறப்பட்ட ஆடை சுதந்திரம்; கல்வியமைச்சரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்"

அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி பரீட்சை மண்டபத்தில் க.பொ.த உயர்தர பௌதீகவியல் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு மன உளைச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் வகையில் பெண் மாணவிகள் கலாசார முறைப்படி தலைகளை மறைத்திருந்த துணிகளை பலவந்தமாக அகற்ற முயற்சி செய்த ஆண் பரீட்சை மேற்பார்வையாளர் பற்றி கல்வி அமைச்சர் என்ற வகையில், பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

குறித்த சம்பவத்தினை ஒரு சாதாரண சம்பவமாக கடந்து போக முடியாது. இலங்கையில் காலா காலமாக ஆடை சுதந்திரமானது தொடர்த்தேச்சையாக மீறப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இதில் எப்போதும் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்களே. அண்மையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் 9 பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை சுதந்திரம் மீறப்பட்டது. 

எமது அரசியலமைப்பானது உறுப்புரை 12(1) இல் தெளிவாக அனைவருக்கும் சமனான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்பதனை ஒரு 'அடிப்படை உரிமையாக' உறுதிப்படுத்தி இருக்கிறது. பரீட்சை மண்டபத்திற்குள், அடையாளம் காணும் முகமாக. முகத்தையும் காதுகளையும் மாத்திரம் மறைக்காமல் இருப்பது போதுமானது என்று பரீட்சைத் திணைக்களத்தினால் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும், இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. 

இன்றைய சம்பவத்தினால் ஏற்பட்ட உளவியல் நெருக்கடிக்கும், அதனால் மறுக்கப்பட்ட சம வாய்ப்பிற்கும், பல்கலைக்கழக நுழைவில் அது ஏற்படுத்தப்போகும் தாக்கத்திற்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? 

இவ்வாறு தொடர்ந்தும் ஆடை சுதந்திரம் மீறப்படுவதற்கான காரணம், இது குறித்த கண்காணிப்பினை மேற்கொள்ள மற்றும் இப்படியான உளவியல் நெருக்கடிகள், வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்குரிய பொருத்தமான கண்காணிப்பு பொறிமுறை (Monitoring Mechanism/Monitoring Body) ஒன்று இலங்கையில் இல்லை என்பதாகும். 

ஆகவே இதுகுறித்து உடனடியாக பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு,  ஆடை சுதந்திரம் மீறப்படுவதனை கண்காணிக்க மற்றும் இப்படியான உளவியல் நெருக்கடிகள், வன்முறைகள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்குரிய பொருத்தமான கண்காணிப்பு பொறிமுறை (Monitoring Mechanism/Monitoring Body) ஒன்றினை ஏற்படுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ரிஸானா ஷிமாஸ்,

பிரதித் தலைவர்,

சமூக நீதிக் கட்சி.

14.08.2026. See less

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »