Our Feeds


Saturday, August 1, 2026

Zameera

மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு


 மட்டக்களப்பு மாவட்டத்தின் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவும், அங்கு நடைபெறும் அத்துமீறிய பயிர்ச்செய்கைகளைத் தடுத்து நிறுத்தி, ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (31) நடைபெற்றது. 


இதன்போது, மாவட்டத்தில் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், அத்திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்பட்டது. 


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய பாலங்கள் புனரமைப்பு வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாகச் சிறிய பாலங்கள் முதல் பாரிய அளவிலான பாலங்களைப் புனரமைப்பது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. 


பட்டிருப்பு பாலம், மண்டூர் - குறுமண்வெளி பாலம், அம்பிளாந்துறை - குருக்கள்மடம் பாலம், சந்திவெளி - திகிலிவெட்டை பாலம், வெல்லாவெளி - திவுலானை வீதி மற்றும் அம்பிளாந்துறை - வில்லுக்குளம் வீதி ஆகிய திட்டங்களுக்கான சாத்தியவள ஆய்வு அறிக்கைகளை விரைவாகத் தயாரித்து, அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பது குறித்து இங்கு வலியுறுத்தப்பட்டது. 


உறுகாமம் மீனவர் சங்கம் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் இறங்குதுறைப் பிரச்சினை தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அனைத்துத் தரப்பினரின் கருத்துகளும் பரிசீலிக்கப்பட்டன. 


இதன்போது மீனவர்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, அனைத்து மீனவர்களும் உறுகாமம் குளத்தில் அமைந்துள்ள இறங்குதுறையில் தங்களது தோணிகளை நிறுத்திப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 


விவசாயிகளின் நெல் கொள்வனவு, நெல்லுக்கான உத்தரவாதக் கொள்விலை, விவசாயிகளின் நலன் மற்றும் மாவட்ட மக்களின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகள் ஆகிய அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டன. இவ்விடயங்கள் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள் இனியும் தாமதமின்றிச் செயற்பட்டு, மக்களுக்கு நடைமுறைப்படியான தீர்வுகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 


நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு - மாதவனை பிரச்சினை தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, மகாவலி அதிகாரசபை ஊடாகக் கால்நடைப் பண்ணையாளர்களுக்குக் காணி ஒதுக்கீடு செய்வது தொடர்பில் வழங்கிய உறுதிமொழி குறித்து ஆராயப்பட்டது. அதேவேளை, தற்போது மயிலத்தமடு - மாதவனை பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் அத்துமீறிய பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவருவது குறித்துப் பண்ணையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து, அவ்வாறான அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அங்கிருந்து வெளியேற்றி, கால்நடை பண்ணையாளர்களுக்குக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. 


குறிப்பாக, வனவளத் திணைக்களத்தினர் இவ்விடயத்தில் பக்கச்சார்பாகச் செயற்படுவதாகவும், பட்டிப்பளை, மயிலத்தமடு போன்ற பகுதிகளில் காடுகளை வெட்டி அத்துமீறிய பயிர்ச்செய்கைகளை முன்னெடுக்கும்போது அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், சாதாரண பொதுமக்கள் இவ்வாறு செய்தால் வழக்குத் தாக்கல் செய்வதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞானமுத்து சிறிநேசன், இளையதம்பதி சிறிநாத், கந்தசாமி பிரபு, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். 


அத்துடன், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷனி ஸ்ரீகாந்த், பிரதேச செயலாளர்கள், முப்படை உயர் அதிகாரிகள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர்களான வி.நவநீதன், ஆர். நிர்மலராஜ், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், காவல்துறைத் திணைக்கள உயர் அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »