Our Feeds


Wednesday, August 19, 2026

Zameera

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட ஒப்புதல்


 (நா.தனுஜா)


பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன்பின்னர் அச்சட்டமூலம் பற்றி விரிவாக விவாதிக்கமுடியும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.


அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (18) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.


இதன்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்தார்.


அதனையடுத்து இச்சட்ட வரைவு குறித்து ஏற்கனவே பல்வேறு கரிசனைகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவை தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளனவா என ஊடகவியலாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:



பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் தொடர்பான கருத்தாடல்கள் நீண்டகாலமாகவே இடம்பெற்றுவருகின்றன. அச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. இருப்பினும் அதனை நீக்கிவிட்டு, பயங்கரவாதம் உள்ளிட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களைக் கையாள்வதற்கு ஏதுவான சட்டமொன்றை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியமாகும்.


அதற்கமைவாகவே தற்போது அவசியமான திருத்தங்களுடன் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் இதுபற்றி மேலும் விவாதிக்கமுடியும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »