பிள்ளையான் என அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதில் நீதவான் முன்னிலையில் இன்று (18) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் காணொளி வழியே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து படுகொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பல சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
2008 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு கல்லடி முருகன் கோயிலுக்கு அருகில் முன்னாள் பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008 மே 22 அன்று காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், மற்றும் 2008 ஆகஸ்ட் 20 ஆம் திகதி இரவு வவுணதீவு பகுதியில் ஆயுதக் குழு ஒன்றினால் மற்றுமொரு நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உள்ளிட்ட பல சம்பவங்களுடன் தொடர்புடைய 3ஆம் சந்தேகநபராக சந்திரகாந்தனைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பெயரிட்டுள்ளது.
