Our Feeds


Sunday, August 30, 2026

Zameera

பொதுமக்களுக்கு இடையூறின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை!


 (செ.சுபதர்ஷனி)


பொதுமக்களின் அமைதியான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காத வகையில் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கி சாதனங்களை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மேற்படி விடயம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை  (30)  பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,


ஒலிபெருக்கிகளால் ஏற்படும் அதிக சத்தம் சிறுவர்கள், மாணவர்கள், முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாரிய உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதகிறது.


உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பிறருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகளை இயக்குவது தண்டனைச் சட்டக்கோவையின் 261 ஆம் பிரிவின் கீழ் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் குற்றமாகக் கருதப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இரவு 10.00 மணி முதல் மறுநாள் காலை  6.00 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது.



இருப்பினும், மத ரீதியான அல்லது விசேட நிகழ்வுகளுக்கு உரிய பொலிஸ் அனுமதிப் பத்திரத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு சலுகைகள் வழங்கப்படும். 


இதன்படி, திங்கள் முதல் வியாழன் வரை இரவு 10.00 மணி வரையிலும், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அதிகாலை 1.00 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணி வரையிலும் அனுமதி பெறப்பட்ட நேரங்களில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த முடியும்.


அனுமதி பெறப்பட்டிருப்பினும், குறித்த வளாகத்தைத் தாண்டி அதிக சத்தம் எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுபவர்களின் ஒலிபெருக்கி சாதனங்களைக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.


பொதுமக்கள் இவ்வாறான   அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கோ  அல்லது 118, 119 ஆகிய  துரித தொலைபேசி இலக்கங்களையோ தொடர்பு கொண்டு  அறிவிக்க முடியும்.   

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »