Our Feeds


Monday, August 17, 2026

SHAHNI RAMEES

வட, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், விகாரைகளுக்குள்ளும் தமிழ்மக்கள் படுகொலைசெய்து புதைக்கப்பட்டுள்ளனர்.

 


வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள

இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.


எனவே தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளை பாதுகாக்கும் அரணாக வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவமுகாம்களையும், விகாரைகளையும் பயன்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இராணுவ முகாம்களிலுள்ள இராணுவத்தினரை வெளியேற்றிவிட்டு சர்வதேச மேற்பார்வையில் இராணுவ முகாம்களையும், விகாரைகளையும் அகழ்வாய்விற்கு உட்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.


செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு நீதிகோரி தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (17) மேற்கொள்ளப்பட்ட நீதியின் ஓலம் - 02' இறுதிநாள் மாபெரும் ஆர்ப்பாட்டப்பேரணியில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.



இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,


செம்மணி படுகொலை உள்ளிட்ட ஈழத் தமிழர்கள்மீது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு பன்னாட்டு நீதி தேவை என்பதை வலியுறுத்தியே சிறார்கள், பெண்கள், முதியவர்கள் என பெருந்திரளானவர்கள் இந்த கொழுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்டதூரம் இந்த ஆர்ப்பட்டப் பேரணியினை முன்னெடுத்திருக்கின்றனர்.


ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்குமான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையினை தற்போதைய ஆட்சியாளர்களாவது ஏற்றுக்கொண்டு, குறித்த படுகொலைகளுக்குரிய சர்வதேச நீதிவிசாரணையை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியே இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.


கடந்த ஆட்சியாளர்களின் காலத்தில் செம்மணிப் புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்பட்ட வரலாறுகளும் உள்ளன. அவ்வாறு செம்மணி புதைகுழி விவகாரத்தினை மூடிமறைத்த இனவாத ஆட்சியாளர்களும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும். இது தொடர்பில் ஏற்கனவே நான் பாராளுமன்றிலும் வலியுறுத்தியுள்ளேன்.


அத்தோடு தற்போது வடகிழக்கில் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களிலும் தமிழ்மக்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகங்கள் எமக்கு எழுகின்றது.


எனவே வடக்கு கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள இரணுவ முகாம்களிலுள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, குறித்த இராணுவ முகாம்களை அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். இதனை மக்களே எம்மிடம் முறையிட்டுள்ளனர். எனவே இராணுவ முகாம்களை அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும்.


தற்போதைய அரசு நீதியானஅரசு எனில், சர்வதேச தலையீட்டுடன் இராணுவ முகாம்களையும் அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்தி, தமிழ்மக்களின் எலும்புக்கூடுகள் இராணுவ முகாம்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. என்ற உண்மையை வெளிப்படுத்துங்கள்.


இராணுவத்தினரை அகற்றிவிட்டு இராணுவ முகாம்களை அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்துவதுடன், எவ்வித நிலத் தொடர்புமில்லாமல் எமது தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளையும் அகழ்வாய்வுகளுக்கு உட்படுத்துங்கள். உண்மைகளை வெளிப்படுத்துங்கள்.



தயவு செய்து தமிழர்கள் மீதான படுகொலைகளை மூடி மறைப்பதற்கு இராணுவ முகாம்களையும், பௌத்தவிகாரைகளையும் அரணாக் பயன்படுத்தாதீர்கள். படுகொலைக் குற்றவாளிகளை காப்பாற்றுகின்ற வேலைகளைச் செய்யாதீர்கள்.


எனவே உண்மைகளை வெளிப்படுத்துவதன் ஊடாக படுகொலைக் குற்றவாளிகளுக்கு தண்டனையை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான வழிவகைகளைச் செய்யுங்கள்.


மேலும் எமக்கான நீதி கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோமெனத் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »