நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து தற்போது வெளிநாடு சென்று தலைமறைவாகியுள்ள பாதாள உலகக்குழுத் தலைவரும், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படுபவருமான கஞ்சிபானை இம்ரானை கைது செய்ய மலேசிய பொலிஸார், சர்வதேச பொலிஸார் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தலைமையிலான இலங்கை பொலிஸ் குழுவினரும் இணைந்து பாரிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பாதாள உலகக்குழுத் தலைவரான கஞ்சிபானை இம்ரானைச் சர்வதேச பயங்கரவாதி என அறிவிப்பதற்கு மலேசிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அந்நாட்டில் அவர் பதுங்கியிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் பல பகுதிகளிலும் பொலிஸாரால் தீவிர சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கஞ்சிபானை இம்ரான் மலேசியாவிலிருந்து வெளியேறுவதைத் தடுப்பதற்காக, அந்நாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் கடல் மார்க்கங்கள் என அனைத்து வழிகளையும் அடைப்பதற்கான நடவடிக்கைகளையும் மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரும் மேற்கொண்டுள்ளனர்.
கஞ்சிபானை இம்ரானுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் அவரின் நெருங்கிய சகாக்கள் ஒரு சிலர் தொடர்பான விபரங்களும் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட கஞ்சிபானை இம்ரானின் நெருங்கிய ஆதரவாளரான ரத்மலானை சைமா உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களிடமும் மலேசிய பொலிஸார் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல ஆகியோர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அதற்கமைய கஞ்சிபானை இம்ரான் மற்றும் அவருடன் தொடர்புடைய வலையமைப்புத் தொடர்பிலும் பல முக்கிய தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளன.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இரகசிய நடவடிக்கையின் போது இம்ரானின் நெருங்கிய ஆதரவாளரான ரத்மலானை சைமா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுதாகரித்துக் கொண்ட கஞ்சிபானை இம்ரான் அவர் தங்கியிருந்த பகுதியிலிருந்து வெளியேறி வேறு பகுதிக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேற்படி கைது நடவடிக்கையானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்புச் செயலாளர் ரவி செனவிரத்ன, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட ஆகியோரின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான கஞ்சிபானை இம்ரானை கைது செய்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Thursday, August 6, 2026
கஞ்சிபானை இம்ரானை கைது செய்ய மலேசிய - சர்வதேச பொலிஸாருடன் இலங்கை இணைந்து நடவடிக்கை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
