நபிகள் நாயகம் முஹம்மது(ஸல்) அவர்களை அவமதிப்பதாக பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்ட அனோஜனுக்கான மேல்முறையீடு வெற்றியடைவதற்கோ அல்லது தண்டனை குறைக்கப்படுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு.
சவூதி அரேபிய நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 30 இலட்சம் சவூதி ரியால் (SAR 3 மில்லியன்) அபராதமும் விதித்துள்ள இலங்கை இளைஞரின் குடும்பம், அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் தேவையான சட்டச் செலவுகளை ஏற்க முடியாத நிலை காரணமாக சர்வதேச உதவியை கோரியுள்ளது.
கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் பெற்றோர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையருக்கு கடிதம் எழுதி, அவரது தண்டனையை குறைக்கவும், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கும் உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்பத்தினரின் தகவலின்படி, இஸ்லாம் மதத்தையும் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களையும் அவமதிப்பதாக பேஸ்புக் பதிவொன்றை வெளியிட்ட அனோஜன், சவூதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
2026 ஜூலை 31 ஆம் திகதியிட்ட இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள கடிதத்தின்படி, சவூதி நீதிமன்றம் அனோஜனுக்கு பின்வரும் தண்டனைகளை விதித்துள்ளது:
முதல் தடவை கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து கணக்கிடப்படும் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை.
30 இலட்சம் சவூதி ரியால் (SAR 3 மில்லியன்) அபராதம்.
குற்றம் புரிய பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனத்தை பறிமுதல் செய்தல்.
சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடகக் கணக்கை மூடுதல்.
தீர்ப்பு வழங்கப்பட்டதிலிருந்து 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுள்ள சட்ட ஆலோசனையின் அடிப்படையில், மேல்முறையீடு வெற்றியடைவதற்கோ அல்லது தண்டனை குறைக்கப்படுவதற்கோ வாய்ப்பு மிகவும் குறைவு எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீட்டுக்கான வழக்கறிஞர் கட்டணமாக 20,000 சவூதி ரியாலும், மேல்முறையீட்டு மனுவை தயாரித்து தாக்கல் செய்வதற்காக மட்டும் 5,000 சவூதி ரியாலும் செலவாகும் என்றும், இந்தச் சட்டச் செலவுகளை குற்றம் சாட்டப்பட்ட நபரே ஏற்க வேண்டும் என்றும் இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அனோஜன் குடும்பத்தின் பிரதான வருமானம் ஈட்டும் நபர் என்றும், தற்போது குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம் விதித்துள்ள அபராதத்தையோ, மேல்முறையீட்டிற்குத் தேவையான சட்டச் செலவுகளையோ ஏற்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மனிதாபிமான அடிப்படையில் அவரது தண்டனையை குறைத்து, அவரை இலங்கைக்கு மீண்டும் அழைத்து வருவதற்கான முயற்சிகளுக்கு உதவி வழங்குமாறும் அவர்கள் ஐ.நா.விடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சவூதி அரேபியாவில் இந்த வழக்கை முன்னெடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளுக்கான நிதி உதவியையும் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
