Our Feeds


Thursday, August 20, 2026

ShortNews

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரத்தின் பின்னணியில் அரசாங்கம்!


சுற்றுநிரூபத்துக்கமைய முஸ்லிம் பெண் சுகாதார சேவைகள்  கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கலாசார உடையுடன் பணியில் ஈடுபட  முடியாது என்றால், அவர்கள் எவ்வாறு அதே சுற்று நிரூபத்துக்கமைய கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் பணியில் ஈடுபட முடியும். எனவே இந்த சீருடை சர்ச்சையின் பின்னணியில் அரசாங்கம் தான் உள்ளது என்ற சந்தேகம் எழுகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற  பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்) சட்டமூலம்  மீதான  விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

சீருடை  சர்ச்சையின் அடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார  வைத்தியசாலையில்  முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களுக்கும்  அனுமதி மறுக்கப்பட்டமை கண்டிக்கத்தக்கது. ஒரு சமூகத்தின் கலாசார, மத அடையாளங்கள் மதிக்கப்பட வேண்டியது மனித உரிமைகளின் அடிப்படை பண்பாகும்.

கடந்த இரு வாரங்களாக பேசு பொருளாகவுள்ள இந்த விடயத்தில் நேரடியாக தலையிட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. சுற்றுநிருபத்தின்படிதான் இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.

சுற்றுநிருபத்தின்படி கல்முனை  வைத்தியசாலையில் கலாசார ஆடையுடன் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களும் பணிபுரிய முடியாதென்றால் அவர்கள் எப்படி கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் பணிபுரிய முடியும்?

எனவே இந்த ஆடை சர்ச்சையின்  பின்னணியில், இரு சமூகங்களை மோத விடும் திட்டத்தில் அரசாங்கம் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகின்றது. அவ்வாறில்லை என்றால் அந்த 9 முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களையும்  கல்முனை வைத்தியசாலையில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.  அவர்கள் தமது கலாசார ஆடையுடன் பணிபுரிய முடியுமென அறிவிக்க வேண்டும்.

தமிழ் மக்கள் மத,  கலாசாரங்களை மதிக்கின்றவர்கள். எனவே கல்முனை வைத்தியசாலை ஆடை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதேவேளை முஸ்லிம் மக்களும் எமது கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் நியமனம் தொடர்பிலான கோரிக்கை தொடர்பில் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »