சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் வழக்குகள் தாமதமடைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளபோதிலும், அந்தத் திணைக்களம் வேண்டுமென்றே எந்தவொரு தாமதத்தையும் ஏற்படுத்துவதாகத் தாம் நினைக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் வழக்குத் தாமதங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பல கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதோடு, புதிய நியமனங்களும் இடம்பெறவேண்டிய அவசியமும் காணப்படுகின்றது. குறைந்த அளவிலான அதிகாரிகளே அதிகளவிலான வழக்குகளைக் கையாள வேண்டிய சூழல் அங்கு நிலவுகின்றது.
இருப்பினும், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை அவர்கள் சரியாகக் கவனத்தில்கொண்டு செயற்படுவார்கள் என நம்புகிறோம். தங்களது அதிகபட்ச முயற்சியைப் பயன்படுத்தி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கின்றோம் என்றார்.
