Our Feeds


Wednesday, August 26, 2026

Zameera

தீவகத்தில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட வேண்டும்


 தீவக மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.




யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஈ.பி.டி.பியின் ஊடக செயலாளர் இன்று (26) முன்னெடுத்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.




இதன்போது அவர் மேலும் கூறுகையில்,நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் கடந்த அரசாங்க காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டது.




குறிப்பாக அதற்கான நடவடிக்கைகளில் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் முக்கிய பங்காற்றியிருந்தார்.




அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் இந்த விடயம் தொடர்பில் பிரஸ்தாபித்திருந்த டக்ளஸ் தேவானந்தா, தீவகங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின் இணைப்புக் கட்டமைப்புடன் இணைக்கவேண்டிய அவசியம் இல்லாமையால் அங்கு உற்பத்தியாகும் மின்சாரம் அந்தந்த தீவுகளின் மக்களுக்கே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுவகவும், சுட்டிக்காட்டியிருந்தார்.




மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் தீவக மக்கள் பொருளாதார ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் வாழ்வதை கருத்தில் கொண்டு, இந்திய உதவியுடன் அமைக்கப்படும் மின்சார உற்பத்திக் கட்டமைப்புகளில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் உற்பத்திச் செலவை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட தீவக மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்திருந்தார்.




இந்தக் கோரிக்கைக்கு அப்போதைய அமைச்சரவையும் சாதகமான இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்ததாக சுட்டிக்காடிய ஸ்ரீகாந், கடந்த அரசாங்க காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் சாதகமாக பரிசீலித்து, நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.




(பு.கஜிந்தன்)




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »