Our Feeds


Tuesday, August 4, 2026

SHAHNI RAMEES

இலங்கையில் முதல் முறையாக மோட்டார் சைக்கிள்களுக்கு தனி பாதை!

 


மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைத்து

வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், இலங்கையின் முதல் மோட்டார் சைக்கிள்களுக்கான பிரத்தியேக பயணப் பாதை (Dedicated Motorcycle Lane) அமைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


"நூறுக்கு நூறு " தேசிய பெரு நிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், இருசக்கர வாகனங்களைச் சேர்ந்த விபத்துகள் நாட்டின் வீதிப் பாதுகாப்பில் மிகப் பெரிய சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிள்களுக்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் பிரத்யேக பாதை, பிற வாகனப் போக்குவரத்திலிருந்து ரப்பர் தடுப்புகள் (Rubber Dividers) மூலம் தனிமைப்படுத்தப்படும் என்றும், அதற்கான வடிவமைப்புப் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.


அடுத்த சில மாதங்களுக்குள் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.



மலேசியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ள மோட்டார் சைக்கிள் தனிப்பாதை திட்டங்கள் விபத்துகளைக் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளதன் அடிப்படையிலேயே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் விளக்கமளித்தார்.


களுவாஞ்சிக்குடி பகுதியில் அதிகளவில் மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்தப்படுவதால், அந்தப் பகுதி முன்னோடி திட்டத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், திட்டம் வெற்றிகரமாக அமையுமானால் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


தேசிய வீதிப் பாதுகாப்பு பேரவையும் ஹெய்லிஸ் அட்வான்டிஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள " நூறுக்கு நூறு " தேசிய நிறுவன மோட்டார் சைக்கிள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 100 தனியார் நிறுவனங்களை இணைத்து, ஒவ்வொரு நிறுவனமும் 100 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இந்த முயற்சி, நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துகளைக் குறைத்து பாதுகாப்பான சாலைப் போக்குவரத்து கலாசாரத்தை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »