(செ.கவிஷனா)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு குறித்து அரசாங்கம் உண்மையான குற்றவாளிகளை மறைக்க பார்க்கிறதா என்று சந்தேகம் எழுகிறது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர், விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை (03) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் சூழ்ச்சி செய்தவர்கள், அதற்கு நிதியுதவி வழங்கியவர்கள் மற்றும் ஆதரவாக செயல்பட்ட அனைத்து அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீது நியாயமான விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே ஆரம்பத்திலிருந்து தமது நிலைப்படாகும். இருப்பினும், பூஜித ஜயசுந்தர மற்றும் ஹேமசிரி ஆகிய இருவருக்கு மட்டும் தண்டனை வழங்கிவிட்டு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சக்திவாய்ந்த அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தப்பிக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான முந்தைய விசாரணை அறிக்கைகளில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சில உயர் அதிகாரிகளிடமே தற்போதைய விசாரணைகளும் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்த விசாரணைகளின் நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அத்துடன், அரசாங்கத்துக்கு ஆதரவான தரப்பினர் மற்றும் சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள், அண்மை கால நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பிரதம நீதயரசரின் பதவிக் கால நீடிப்பை நியாயப்படுத்த முயல்கின்றனர். சட்டத்தையும், நீதித்துறையையும் அரசாங்கம் தனது சுய அரசியலுக்காகவும், அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், வளைக்க முயற்சிக் கூடாது. வரலாற்றில் சட்ட வரம்புகளை மீறி அதிகாரத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி செயல்பட்ட ஆட்சியாளர்களை மக்கள் தூக்கியெறிந்த வரலாற்றை தற்போதைய அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும், 15000 முதல் 20000 கைதிகளை மட்டுமே கொள்ளகூடிய நாட்டின் சிறைச்சாலை அமைப்பில் தற்போது 40000 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் உள்ளவர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் வழக்கு விசாரணை முடிவடையாத முதற்கட்ட சந்தேகநபர்களாவே உள்ளனர். தண்டனை பெற்றவர்களில் சுமார் 67 சதவீதமானோர் மிகவும் சிறிய அபராதத் தொகையைக் கூட செலுத்த முடியாத காரணத்தினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் சில குறிப்பிட்ட பதவிக் காலங்களை நீடிப்பதை விட்டு சிறைச்சாலையின் நெரிசலைக் குறைக்கவும் தாமதமின்றி வழக்குகளை முடிக்கவும் தேவையான சட்ட சீர்த்திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நீதி அமைச்சர் சிறைச்சாலை நிர்வாகத்திலும், நீதித்துறை நிர்வாகத்திலும் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார் என்றார்.
