புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் காணப்படும் தரக்குறைபாடுகள் காரணமாக, முன்னாள் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரித்தானிய குடிவரவு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டை முறையாக வாசிக்க முடியாததால், அது போலியானதாக இருக்கலாம் என பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் சந்தேகித்ததாக சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை கடவுச்சீட்டுகளில் உள்ள பக்கங்களின் எண்ணிக்கை 64 இலிருந்து 48 ஆக குறைக்கப்பட்டுள்ள போதிலும், கடவுச்சீட்டு வழங்குவதற்கான ரூ.6,000 கட்டணத்தில் எந்தக் குறைப்பும் செய்யப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார்.
புதிய கடவுச்சீட்டுகளில் குறிப்புகள் அல்லது நீட்டிப்புகளுக்கான பக்கங்கள் இடம்பெறவில்லை என்றும், அச்சுத் தரம் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குடிவரவு முத்திரைகளின் மை எதிர்பக்கத்திலும் பதியும் நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் காரணமாக சில நாடுகள் இந்தக் கடவுச்சீட்டுகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, புதிய இலங்கை கடவுச்சீட்டுகளில் தரக்குறைபாடுகள் இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார்.
கடவுச்சீட்டுகளின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைத்தமை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவானது என்றும், பல நாடுகளும் இதே நடைமுறையைப் பின்பற்றுகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், 50 இலட்சம் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், மின்னணு கடவுச்சீட்டு (e-passport) முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Saturday, August 8, 2026
தரக் குறைபாடுகள் காரணமாக சில நாடுகளில் புதிய இலங்கை கடவுச்சீட்டுகள் நிராகரிப்பு - முஜீப் எம்.பி.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
