Our Feeds


Tuesday, August 25, 2026

ShortNews

வறட்சியின் தாக்கம் அதிகரிப்பினால் நீர்த்தேக்கங்களில் நீர்க் கொள்ளளவு குறைவு!


நாட்டில் இன்று (25) கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பநிலையை அவதானிக்கக்கூடியதாக இருக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெப்பச் சுட்டெண் அதாவது, மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் பகல்வேளைகளில் ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையின் ஈர வலயத்தில் அமைந்துள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தில் இதுவரை வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்றாலும் உலர் வலயத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவு வேகமாகக் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் நேற்று (24) ஊடகங்களுக்குத் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, மொனராகலை, மன்னார் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள சில நீர்த்தேக்கங்களின் நீர்க் கொள்ளளவு தற்போது 30 சதவீதத்துக்கும் குறைவான மட்டத்துக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையின் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு 36 சதவீதம் வரை குறைந்துள்ளது. பொதுவாக ஓகஸ்ட் மாதத்தில் வறண்ட காலநிலை நிலவுகின்ற போதிலும், இந்த வருடம் நிலவும் எல்நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அத்துடன், நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களிலுள்ள நீர் வேகமாக ஆவியாகி வருவதால் அவை வறண்டு வருகின்றன. இந்த நிலைமையின் காரணமாக நீருக்கான தேவை அதிகரித்து வருகின்றபோதிலும், நீர் வளம் வேகமாகக் குறைந்து வருகிறது.

இதன் காரணமாக கடுமையான வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளுக்காக நீரை ஒதுக்க வேண்டியநிலை ஏற்படுவதால், விவசாய நடவடிக்கைகளுக்காக நீரை வெளியிடுவது சிரமமாக இருக்கக்கூடும்.

இதுவரை குடிநீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படவில்லை என்றாலும், சில பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளுக்காக வெளியிடப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், சுற்றுச்சூழலுக்கு உணர்வுபூர்வமாக வாழ்வதுமே இந்த சவாலான நிலைமையை எதிர்கொள்வதற்கான ஒரே வழியாகும்.

மேலும், நிலவும் அதிக வெப்பம் மற்றும் வறண்ட காலநிலை காரணமாக காட்டுத்தீ போன்ற நிலைமைகள் ஏற்படக்கூடும். அவை மிக வேகமாகப் பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்கால காலநிலை மாற்றங்களுக்கு முன்னதாக தயாராகும் வகையில் எல் நினோ தொடர்பான முன்னறிவிப்புகள் குறித்து தொடர்ச்சியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »