கொங்கோ ஜனநாயகக் குடியரசில் தீவிரமடைந்து வரும் எபோலா வைரஸ் பரவல், வரலாற்றிலேயே மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் ரெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தற்போதைய பரவல் வேகத்தில் தொடர்ந்தால், 2014-2016 காலப்பகுதியில் 11,000 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட கொடூரமான எபோலா அலை சாதனையை இது மிஞ்சக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
கடந்த மே 15 அன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட இத் தொற்றினால், இதுவரை 4,300 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸ் பெப்ரவரி மாதத்திலேயே பரவ ஆரம்பித்ததாகவும், ஆரம்பத்தில் மலேரியா அல்லது டைபாய்டு எனக் தவறாகக் கணிக்கப்பட்டதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆபிரிக்கப் பணிப்பாளர் வைத்தியர் முகமது ஜனாபி தெரிவித்துள்ளார்.
இம்முறை பரவுவது மிகவும் அரிய வகையான புண்டிக்புகியோ வகை எபோலா வைரஸ் ஆகும். இதற்கு முன் 2007 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே இவ்வகை கண்டறியப்பட்டது.
'புண்டிக்புகியோ' வகை வைரஸுக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லை.
கிழக்கு கொங்கோவில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆயுதப் போராட்டங்கள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களால் 30% பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே சென்றடைய முடிகிறது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்படும் 'புண்டிக்புகியோ' தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்க பிரித்தானிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
வேறு மூன்று நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ஏற்கனவே உள்ள இரண்டு ஆன்டிவைரல் மருந்துகள் மூலம் நோயாளிகளைக் காப்பாற்ற முடியுமா என உலக சுகாதார ஸ்தாபனம் கொங்கோவில் கள சோதனைகளை நடத்தி வருகிறது.
