Our Feeds


Saturday, August 22, 2026

Zameera

சுரேஷ் சலேயை விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவி ஜனாதிபதிக்குக் கடிதம்!


 அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கடுமையான இதய நோய் நிலைமையை கருத்தில் கொண்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தடுப்பு காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது மனைவியான மனோரி சலே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 


அவர் ஓகஸ்ட் 20 ஆம் திகதி அனுப்பியுள்ள இக் கடிதத்தின் ஊடாக, தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலிலிருந்து விலக்கி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்புக்குத் தனது கணவரை மீண்டும் அழைத்துச் செல்ல எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும், அவரது உயிருக்கு உடனடியான மற்றும் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். 


அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதற்கும் சிறைவாசம் அனுபவிப்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்ததை அடுத்து, தனது கணவர் மருத்துவச் சிகிச்சைக்காக 2026 ஜூன் 7 ஆம் திகதி இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும், அன்றிலிருந்து அவர் இதயவியல் பிரிவில் இணைக்கப்பட்ட வைத்திய நிபுணர்களின் பராமரிப்பு மற்றும் சிகிச்சையின் கீழ் இருப்பதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதயச் செயற்பாட்டின் தொடர்ச்சியான பலவீனமடைதல் மற்றும் கடுமையான பலவீனம் காரணமாக, தனது கணவருக்கு இதயச் சிகிச்சை ஒன்றுக்கு முகம் கொடுக்க நேரிட்டதுடன், அங்கு அவரது இதயத்தில் தானியங்கு இதயத் துடிப்பு சீராக்கி இயந்திரம் (Pacemaker) பொருத்தப்பட்டுள்ளதாகவும் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். 


குறித்த பின்னணியில் தனது கணவர் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் வாழ்வதாகவும், அவருக்கு நெருக்கமான, தொடர்ச்சியான மற்றும் விசேட மருத்துவக் கண்காணிப்பு மற்றும் கவனம் அவசியமானது எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 


சுரேஷ் சலேயின் மனைவி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இவ்வாறானதொரு நிலையில் தடுப்புக் காவல் உத்தரவை மேலும் நீட்டிப்பதும், இலங்கை தேசிய வைத்தியசாலையின் மருத்துவச் சூழலிலிருந்து அவரை வெளியேற்றி மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொறுப்புக்குக் கொண்டு செல்ல எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் அவரது உயிருக்கு உடனடியான மற்றும் தீவிரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


எனவே, தற்போதைய தடுப்புக் காவல் உத்தரவு காலாவதியானதும் அதனை மீண்டும் நீடிக்க வேண்டாம் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 


எந்தவொரு சட்டபூர்வமான விசாரணைகளுக்கும் தடைபோடவோ, அதனைத் தாமதப்படுத்தவோ அல்லது அதில் தலையிடவோ தனது கணவருக்கோ அல்லது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கோ எந்தவிதமான எண்ணமும் இல்லை எனவும், சட்டத்திற்கு அமைய மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைக்கும் பூரண ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் மனோரி சலே தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »