Our Feeds


Monday, September 21, 2026

Zameera

மக்கள் சக்தியால் 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும்

 

அரசாங்கத்திற்கு 2/3 பெரும்பான்மை இருந்தாலும், மக்கள் சக்தியால் 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.




குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டம் நேற்று (20) இப்பாகமுவ பாங்கொல்லையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரை ஆற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.




தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளும் சவால்களும் நிலவும் சூழ்நிலையில், அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற முயன்று வருகின்றது. 




இந்த 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் கனம் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை, ஜனநாயகம், நீதி வழங்கும் பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவை சீர்குலைக்கப்படும். 




கனம் நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் அடிமையாக மாற்றி, நாட்டை சர்வாதிகாரப் ஆட்சியை நோக்கி இட்டுச் செல்லும் இந்தத் திருத்தம் எதிர்வரும் 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அரசாங்கத்திற்கு 159 பெரும்பான்மை பலம் இருந்தாலும், மக்கள் சக்தியினைக் கொண்டு இத்திருத்தத்தைத் தோற்கடிக்க வேண்டும்.




நிலக்கரி மோசடிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த சமயம், ஜனாதிபதி உட்பட பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையும் உள்ளூராட்சி மன்றங்களின் பெரும்பான்மையும் அரசாங்கத்திற்கே காணப்பட்டதால், அன்று நிலக்கரி மோசடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.  




இருந்த போதிலும், இன்று மின்சக்தி அமைச்சரோ அல்லது அமைச்சின் செயலாளரோ அந்தப் பதவிகளில் இல்லை. இராஜிமனா செய்து செல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. மக்கள் சக்தியால் செய்யக்கூடிய காரியங்களை அற்பமாக எடைபோட முடியாது. இந்த மக்கள் சக்தியினாலேயே 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி கூட வீட்டிற்குச் செல்ல நேரிட்டது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு நினைவு கூர்ந்தார்.




தனிக் கட்சி ஆட்சியை உருவாக்கவே அரசாங்கம் முயல்கிறது. 




நமது நாட்டில் சமீப காலத்தில் 5 அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 17, 18, 19, 20, 21 ஆகிய திருத்தங்களுக்குக் கையை உயர்த்தியவர்கள் இன்றும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்கைப்பற்றுள்ள அரசியல் சீரழிந்து வருகின்றது.




இந்நாட்டின் ஜனநாயகம், மக்களின் சுதந்திரம் மற்றும் அரசியல் செய்யும் சுதந்திரம் ஆகிய உரிமைகள் நாட்டின் 220 இலட்சம் மக்களுக்கும் சொந்தமானதாக அமைந்து காணப்பட வேண்டும். அநுர குமார திஸாநாயக்க தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயல்வதால், இந்த சர்வாதிகாரப் பயணத்திற்கு இடமளிக்கக் கூடாது.




அரசாங்கத்தின் பொய் மற்றும் ஏமாற்றுகளால் மக்கள் இப்போது சலிப்படைந்துள்ளனர். 




நமது நாட்டில் வாழும் 220 இலட்சம் மக்களின் ஒரே எதிர்பார்ப்பு, நாட்டை முன்னேற்றும், அபிவிருத்தி செய்யும், மக்களுக்கு நன்மை பயக்கும் முற்போக்கான, உண்மையான மற்றும் யதார்த்தமான ஒரு தொலைநோக்குப் பார்வையாகும். நாட்டின் 220 இலட்சம் மக்களும் பொய், பித்தலாட்டம் மற்றும் ஏமாற்றுகளால் சலிப்படைந்துள்ளனர். 




கடந்த தேர்தல்களின் போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று மக்கள் எதிர்பார்த்தபோதிலும், இன்று அந்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குற்றம் சாட்டினார்.




தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.




மின்சாரக் கட்டணத்தை 33% ஆல் குறைத்தல், கமிஷன்களை ஒழித்து துறைமுகத்தில் இறக்கப்படும் விலையிலேயே நுகர்வோருக்கு எரிபொருளை வழங்குதல் போன்ற வாக்குறுதிகளை அளித்த போதிலும், இன்று அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. தங்களை அதிகாரத்திற்கு கொண்டு வர ஆயிரம் தடைகளுக்கு மத்தியிலும் வாக்களித்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இப்போதுமாவது நிறைவேற்ற வேண்டும். 




ஜனாதிபதி கூறியது போல் எரிபொருள் மீதான வரிகள் நீக்கப்படவோ அல்லது பொருட்களின் விலைகள் குறைக்கப்படவோ இல்லை. குறைந்தபட்சம் 12 இலட்சம் ரூபாவுக்கு விட்ஸ் (Vitz) ரக கார் கூட கிடைக்கவில்லை என்றும் இங்கு சுட்டிக்காட்டினார்.




மீன் வளத்தைக் காட்டும் அந்த 'App (செயலி)' எங்கே?




மீனவர்கள் மீன்கள் இருக்கும் இடத்தை அறிந்துகொள்வதற்காகத் தனி செயலி (App) அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட போதிலும், இன்று அந்த செயலி கூட இல்லை. மீன்பிடி உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்களுக்கு மேலதிக VAT வரிகளை விதித்து இந்த அரசாங்கம் மக்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. நெல் அறுவடை செய்து ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா வழங்குவதாகக் கூறி விவசாயிகளையும் ஏமாற்றியுள்ளனர். 




ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறினாலும், இன்று ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்ய 137 ரூபா செலவாகிறது என விவசாய அமைச்சரே ஒப்புக்கொண்ட போதிலும், விவசாயிகளுக்கு 120 ரூபாயே வழங்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.




இந்த அரசாங்கம் விவசாயிகள், மீனவர்கள் போன்று இளைஞர்களையும் ஏமாற்றியுள்ளது. 




வறுமை அதிகரித்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் 'அஸ்வெசும' நிவாரணம் கூட வெட்டப்பட்டு வருகின்றது. நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் தொழில்கள் மற்றும் சொத்துக்கள் 'பராட்டே' சட்டத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு வருகின்றன. பட்டதாரிகளுக்கு இன்று வேலைவாய்ப்புகள் இல்லை. 




நாட்டின் வேலையற்ற இளைஞர் தலைமுறையை ஏமாற்றிய இந்த அரசாங்கத்தின் கீழ், ரணசிங்க பிரேமதாச அவர்களால் தொடங்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகள் கூட நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவெடுத்துள்ளது என்று இங்கு மேலும் தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »