Our Feeds


Tuesday, September 29, 2026

ShortNews

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மாற்றுவதாக சஜித் கூறுவது குறுகிய சிந்தனை - தேவானந்த சுரவீர!


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிகாரத்துக்கு வந்தால் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீள மாற்றுவதாகத் தெரிவித்துள்ளமை அவரது குறுகிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் எமது பாராளுமன்றத்தில் மிகவும் முக்கியமான ஒருவராவார். எனினும், அவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீள மாற்றுவதாகக் கூறுவது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இது தொடர்பில் நாட்டு மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

அவ்வாறு மாற்றியமைப்பது என்றால் என்ன? உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை குறைப்பதா? மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை குறைப்பதா? உயர் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களின் கட்டமைப்பை மீண்டும் சுருக்குவதா? அவ்வாறு செய்வதென்பது நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை சுருக்குவதாகவே அமையும்.

ஒரு நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை சுருக்குவதற்காகவா ஜனாதிபதி ஒருவரை அதிகாரத்துக்கு கொண்டுவர வேண்டும்? மாறாக, நீதித்துறையை விரிவுபடுத்தி, சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தி, நாட்டில் அனைவருக்கும் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்துவதே அரச தலைவரின் பிரதான பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஆனால், எமது எதிர்க்கட்சித் தலைவர் அதிகாரத்துக்கு வந்த பின்னர் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீள மாற்றுவதாகக் கூறுகின்றார். அவரது அந்தக் கருத்துக்குள்ளேயே அவர் எந்த நிலையில் சிந்திக்கின்றார் என்பது நாட்டின் மக்களுக்கு தெளிவாகின்றது.

அத்துடன், அவர் வெளியிடும் இவ்வாறான கருத்தின் மூலம் மக்கள் பெருமளவில் மகிழ்ச்சியடைந்து, தமக்கு பெருமளவில் ஆதரவு வழங்குவார்கள் என்ற எண்ணம் இருப்பதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த அரசியலமைப்புத் திருத்தம் தேசிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக கொண்டுவரப்பட்டதல்ல.

பாராளுமன்றத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காகவோ இந்த அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்படவில்லை. இதுவரை நாட்டில் அதிகாரத்தை வகித்த அரசியல் கட்சிகள் தமது அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அரசியலமைப்புத் திருத்தங்களை முன்வைத்துள்ளன. 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டதும், 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டதும் அவ்வாறான நோக்கங்களுடன் இடம்பெற்றதாகும்.

ஆனால், தற்போதைய அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் மக்களுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டின் நலன், நீதித்துறையின் விரிவாக்கம், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துதல் மற்றும் நாட்டில் அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மீள மாற்றுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருப்பது, இந்த விடயம் தொடர்பில் அவரது நிலைப்பாடு எவ்வாறானது என்பதை நாட்டின் மக்களுக்கு தெளிவுபடுத்துகின்றது. இந்தத் திருத்தத்தின் ஊடாக நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை விரிவுபடுத்தி, மக்களுக்கு நியாயமானதும் விரைவானதுமான நீதியை வழங்கக்கூடிய சூழலை உருவாக்குவதே முக்கியமானதாகும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »