கிழக்கு சீனாவின் முக்கிய வர்த்தக மையமான கிங்டாவோ துறைமுகத்தில் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகச் சீன அரசு ஊடகமான சிசிரிவி செய்தி வெளியிட்டுள்ளது.
கப்பலில் இருந்த 42 பேரில் 17 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில், அவர்களில் காயமடைந்த 05 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கிங்டாவோ துறைமுகத்திற்கு வந்தடைந்த லைபீரியக் கொடி தாங்கிய 190 மீற்றர் நீளமுடைய 'ஓஷன் மெலடி' என்ற சரக்குக் கப்பலிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
கப்பல் கட்டும் தளத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி காலை 11:15 மணியளவில் தீப்பற்றியுள்ளது. 03 மணிநேரத் தீவிர போராட்டத்திற்குப் பின்னரே தீ முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பிக்குமாறு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதுடன், மேலதிக அசம்பாவிதங்களைத் தடுக்குமாறு சீனப் பிரதமர் லி சியாங் வலியுறுத்தியுள்ளார்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் சீன அதிகாரிகள் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்