றிசாத் ஏ காதர்
தேசிய சிறுவர் பாதுகாப்பு மாநாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு நான்கு தேசிய விருதுகள் வழங்கி கெளரவம்
இலங்கை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த “1st Ever Student Ambassador National Summit on Child Protection in Sri Lanka 2026” எனும் முதலாவது தேசிய மாணவர் தூதுவர் மாநாடு இன்று கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவபீட கேட்போர் கூடத்தில் 2026.09.29ஆந் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மேம்படுத்துவதுடன், சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான சமூக மட்டச் செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2023ஆம் ஆண்டு தொடக்கம் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பாடசாலை மாணவர் தூதுவர் செயற்பாடுகளில் ஈடுபட்ட பாடசாலைகள், பாடசாலை மாணவத் தூதுவர்கள், 17 அரச பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவத் தூதுவர்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு தன்னார்வச் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் தூதுவர்களின் பங்களிப்புகள் இந்நிகழ்வில் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதனடிப்படையில், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தன்னார்வச் செயற்பாடுகள் மற்றும் மாணவர் தூதுவர் வேலைத்திட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 17 அரச பல்கலைக்கழகங்களுள் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாகத் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக மாணவர் தூதுவர் வேலைத்திட்டத்தில் சிறப்பாகப் பங்களித்தமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.டப்ளியூ.என். நளீபா சிறந்த பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளருக்கான விருதினையும், சிறந்த பல்கலைக்கழக மாணவர் தூதுவர் தலைவர் மற்றும் சிறந்த பல்கலைக்கழக மாணவர் தூதுவர் ஆகிய இரு விருதுகளை இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீட 2019/2020 கல்வியாண்டு மாணவர் ஏ.சி.எம். ஆதிப் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இவ்விருதுகள், கல்விசார் செயற்பாடுகளுக்கு அப்பால் சிறுவர் உரிமைகள், சிறுவர் பாதுகாப்பு, சமூகப் பொறுப்பு மற்றும் தன்னார்வச் சேவைகள் போன்ற சமூகநலச் செயற்பாடுகளில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பான பணிகளுக்குக் கிடைத்துள்ள முக்கியமான தேசிய மட்ட அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
மேலும், தேசிய சிறுவர் பாதுகாப்புத் துறையில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் சமூகநலன் சார்ந்த பல்வேறு செயற்பாடுகளில் மாணவர்களை அதிகளவில் ஈடுபடுத்துவதற்கும் இச்சாதனை ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.