இலங்கை அரசால் நேபாள அரசுக்கு மனிதாபிமான உதவியாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2026.08.26 ஆம் திகதி, வடக்கு நேபாளத்தில் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ள நிலைமையால் அதிகமானவர்கள் உயிரிழந்து அதிகளவான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.
இவ் இடர் நிலைமையின் மோசமான தன்மையால் நேபாள அரசுக்கும் மற்றும் மக்களுக்கு குறிப்பிடத்தக்களவு மனிதாபிமான சுமை ஏற்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ளல், தொடர்ந்தும் வெள்ளம் ஏற்படும் அபாயம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கு பாரியளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றமை போன்ற காரணங்களால் நிவாரணங்கள் மற்றும் மீள்கட்டமைப்பு ஆதரவுகளை துரிதமாக வழங்க வேண்டியுள்ளது.
இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் காணப்படுகின்ற ஆழமான கலாசார, சமய மற்றும் பரஸ்பர வெகுசனத் தொடர்புகளின் அடிப்படையில் நீண்டகால நட்புகள் மற்றும் மோசமான இயற்கை அனர்த்தத்தால் இடம்பெற்ற மோசமான மனிதாபிமான மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் தொடர்பாக இலங்கையின் அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதியால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
