(எம்.மனோசித்ரா)
நாட்டின் நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டத்திற்குத் எங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கிப் பங்கேற்கவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தவிசாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
அடுத்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் மற்றும் ஐ.தே.க.வுடனான இணைவு குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகிய இரு தலைவர்களும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக ஒன்றிணைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகத் தென்படுகின்றன.
ஜே.ஆர். ஜயவர்த்தனவின் நினைவு தின நிகழ்வில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இரு தலைவர்களும் ஒரே மேடையில் கலந்துகொண்ட நிலையில், அவர்களின் அணுகுமுறை மற்றும் உடல் மொழியிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே ஒரு இணக்கப்பாடும் ஒன்றிணைவும் ஏற்படுவது தெளிவாகத் தெரிகிறது.
இரு தலைவர்களையும் ஒன்றிணைக்குமாறு எமது கட்சிக்குள்ளிருந்து தொடர்ச்சியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தன. ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பான்மையான உறுப்பினர்களும் இந்த இணைப்பையே விரும்புகின்றனர். இரு தரப்பினரும் ஒரே அரசியல் கொள்கை, ஒரே சித்தாந்தம் மற்றும் ஒரே அமைப்பின் பின்னணியைக் கொண்டவர்கள் என்பதால், இவர்கள் ஒன்றிணையும் பட்சத்தில் மிக வலுவான மக்கள் சக்தியைக் கட்டியெழுப்ப முடியும் என்று நம்புகின்றோம்.
மேலும், தாராளவாத மற்றும் மிதவாத வலதுசாரி அரசியல் கொள்கையே இந்நாட்டின் அடிப்படை கட்டமைப்பாக அமைந்தது. மறைந்த தலைவர் ரணசிங்க பிரேமதாச உட்பட, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அனைவரும் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் அரசியல் தத்துவத்திலேயே உருவானவர்கள். அந்த அரசியல் பாதையில் பயணிப்பதன் மூலமே இலங்கையை தெற்காசியாவின் முதன்மை நாடாக மாற்ற முடியும்.
அதேவேளை, நாட்டின் நீதித்துறை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக சஜித் பிரேமதாச தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய போராட்டத்திற்குத் எங்களுடைய முழுமையான ஆதரவை வழங்கிப் பங்கேற்கவுள்ளோம்.
நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்கவும் நாட்டில் மாற்றத்தைக் கொண்டுவரவும் அரசாங்கத்துக்கு எதிராக இத்தகைய பாரிய மக்கள் அழுத்தங்களைக் பிரயோகிப்பது அவசியமானது.
அரசாங்கம் ஓராண்டு காலத்தில் சாதனைகள் படைத்துள்ளதாகக் கூறுவதை மக்கள் வரவிருக்கும் தேர்தல்களில் மதிப்பிட்டுத் தகுந்த தீர்ப்பை வழங்குவார்கள். எதிர்காலத்தில் மக்கள் ஆதரவுடன் பலமான அமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். இரு தலைவர்களும் ஒன்றிணைந்தால் முதற்கட்டமாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கே முன்னுரிமை அளித்துச் செயற்படவுள்ளோம் என்றார்.