(ஆர்.ராம்)
சவூதி அரேபியாவில் மரதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலைக்காக பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித்தலைவர்கள் கூட்டுக்கோரிக்கை முன்வைக்க வேண்டும் என்று ஆலோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் சிவராசா அனோஜனுக்கு மரதண்டனை விதிக்கப்பட்டுள்மையை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் அனோஜனின் விடயம் சம்பந்தமாக உரையாடியபோது அவரது விடுதலைக்காக உடனடியாக அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தேன்.
அதனைத்தொடர்ந்து குறித்த செயற்பாட்டிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் அன்றையதினம் தமதமின்றி கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைக்கூட்டி அனோஜனின் விடுதலைக்காக ஏகோபித்த தீர்மானமொன்றை எடுத்து அதனை சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
அத்துடன் குறித்த விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்கும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவும் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தினேன் என்றார்.