சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக அரசாங்கம் அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், சவூதி மன்னருக்குக் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் உதவியும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் இதில் பங்கெடுத்துள்ளனர். இதன் மூலமும் சவூதி மன்னரிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளது.
அத்துடன், ஜனாதிபதியின் கோரிக்கையையும், பாராளுமன்றத்தின் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பங்களையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றையும் சவூதி மன்னருக்குச் சமர்ப்பிக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரின் போது, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்து இது தொடர்பாகக் கலந்துரையாடவுள்ளார்.
இவ்வாறாக ராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்துக் நடவடிக்கைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
"இந்தச் சம்பவம் நடந்த நாளிலிருந்தே தூதரகம் தேவையான இராஜதந்திர மற்றும் சட்ட நடவடிக்கைகளில் தலையிட்டு வருகிறது. இங்கு நாம் வேறொரு நாட்டில் உள்ள சட்டத்திற்கு உட்பட்டே செயல்பட வேண்டியுள்ளது. அங்கு இரண்டு மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன; ஒன்று இலங்கை இளைஞர் சார்பாகவும், மற்றொன்று சவூதி அரசாங்கத்தின் சார்பாகவும் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த இரண்டு மேன்முறையீடுகளையும் பரிசீலித்தே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது உயிரைக் காப்பாற்றி அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர நாங்கள் எங்களால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயற்சி செய்து வருகிறோம்" என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Tuesday, September 29, 2026
அனோஜன் விவகாரத்தில் அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கைகள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
