(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க புதன்கிழமை (16) மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அநுராதபுரம், திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் வைத்தியசாலைகளில் 7148 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய கட்டடங்களுக்கு ஜனாதிபதி அடிக்கல் நாட்டவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்தப் பயணத்தின்போது, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டடத் தொகுதிகளுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரும் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்படி, மன்னார் மாவட்டத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடமும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மருத்துவ விடுதிக்கான கட்டடமும் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில், குறித்த கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.