Our Feeds


Sunday, September 27, 2026

SHAHNI RAMEES

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் முன்வைத்த பரிந்துரையை நிராகரித்தார் டிரம்ப்!


வா‌ஷிங்டன்: 

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பதற்கும் மத்திய கிழக்கில்

சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஈரான் முன்வைத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நிராகரித்திருக்கிறார்.


நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாட்டுப் பொதுச் சபைக் கூட்டத்தில் ஈரான் அதன் பரிந்துரையை முன்வைத்தது. கத்தார் சமரசப்பேச்சாளர்கள் மூலம் அமெரிக்கர்களுக்கு ஈரானின் பரிந்துரை அனுப்பப்பட்டது. உத்திபூர்வ முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் ஏழு நாள்களுக்குள் வட்டார மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தான் முன்வைத்த ஒப்பந்தம் உதவும் என்று ஈரான் கூறியிருந்தது.


ஆனால் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நான் அவர்கள் முன்வைத்த பரிந்துரையை நிராகரிக்கிறேன்,” என்றார்.


“அவர்கள் கடுமையாகத் தோல்வியடைந்து வருவதால் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள விரும்புகிறார்கள்,” என்று திரு டிரம்ப் கூறினார்.


“நாம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்று வருகிறோம். அவர்கள் ஓர் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார்கள், அது நல்லதுதான்; எனக்கும் ஒப்பந்தங்கள் செய்வது பிடிக்கும். ஆனால் அவர்கள் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவே விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குப் பணம் வரவில்லை; ஹோர்முஸ் நீரிணை மூலமே அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது,” என்று அவர் சொன்னார்.


ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகத் திரு டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினார். ஈரான் விதித்துள்ள முற்றுகையை விலக்க அதற்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில் அமெரிக்கா அதன் மீது பொருளியல் தடையை விதித்துள்ளது. இது நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்தைக் கணிசமாகக் குறைத்துள்ளது.



முன்னதாக, சமரசப்பேச்சாளர்கள் மூலம் ஈரானுடன் நடத்தப்பட்ட பேச்சு ஆக்ககரமாய் இருந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.


ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக ஈரானிய அதிகாரிகள் சவூதி அரேபியாவுடனும் பேச்சு நடத்தினர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »