Our Feeds


Saturday, September 5, 2026

Zameera

மைதானம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது – அமைச்சர் வசந்த சமரசிங்க


 (க.சிவலிங்கமூர்த்தி)



அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், கிடைக்காத மைதானத்தைக் காரணம் காட்டி மக்களை ஏமாற்ற முயல்வதாகவும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.


அனுராதபுரம் - நாச்சாதூவ பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (04) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,


நகர சபைக்குச் சொந்தமான மைதானங்களில் ஒன்று பொலிஸ் அணிவகுப்புப் பயிற்சிக்காகவும், மற்றொன்று வேறு ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்ததாலுமே வழங்க முடியாமல் போனது. முன்அனுமதி இன்றி மைதானங்களை ஒதுக்க முடியாது என்ற போதிலும், காலியாக இருக்கும் வேறு எந்தவொரு மைதானத்தையும் வழங்குவதற்கு நகர சபை தயாராகவே உள்ளது.


எனவே அனுராதபுரத்தில் கூட்டமொன்றை நடத்துவதற்கு மைதானம் வழங்கப்படவில்லை எனக் கூறி நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை


நாமல் இன்று கைது செய்யப்பட்டு எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டம் அனைவருக்கும் சமம். நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் எதிர்நோக்கும் சட்ட நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கல் அல்ல் நீதிமன்றத்தில் சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி, சட்டவிரோதமாகச் சேர்த்த சொத்துகளை அரசுடைமையாக்குமாறு மக்கள் நமக்கு வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில் புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு, இதுவரை 4,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் அரசுக்குக் கையகப்படுத்தப்பட்டுள்ளன.


முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும் போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனி செல்லுபடியாகாது. 2024 செப்டம்பர் மாதத்தில் நாட்டின் சாதாரண மக்கள் வழங்கிய அதிகாரத்தின் அடிப்படையில், ரணில், மைத்திரி, கோட்டாபய என யார் என்ற வேறுபாடின்றி சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.



நாங்கள் விரும்பிய எவரையும் சிறையில் அடைக்க முடியாது. 2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வெளிநாடுகளுக்குச் சென்று சாட்சியங்களைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.


அத்துடன், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் சேவைக் காலத்தை இரண்டு ஆண்டுகள் நீடித்து, நீதித்துறையின் சுயாதீனத்தையும் திறனையும் உறுதிப்படுத்தவே அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

Subscribe to this Blog via Email :
Latest
Previous
Next Post »