(செ.கவிஷனா)
ஐக்கிய தேசியக் கட்சியானது தொடர்ந்தும் ராஜபக்ஷக்களின் ஆதரவிலோ அல்லது அவர்களின் "மடியிலோ" தஞ்சமடைந்து செயற்படுமாயின், அக் கட்சிக்கு எதிர்காலத்தில் எவ்வித அரசியல் இருப்போ அல்லது முன்னேற்றமோ சாத்தியமில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்துக்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையிலும் சுதந்திரமாகவும் முன்னெடுப்பதற்கு பொலிஸார் இடமளித்திருந்தமை ஜனநாயக ரீதியில் வரவேற்கத்தக்க ஒரு செயற்பாடாகும்.
எனினும், இந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி குழுவினர் மாத்திரமே கலந்துகொண்டிருந்தனர்.
"சிதைந்துபோன எதிர்க்கட்சிகள்" என வர்ணிக்கப்படும் ஏனைய குழுக்கள் இதில் பங்கெடுக்கத் தவறியமையானது, அவர்களின் அதிகார வெறியையும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கூட்டத்தினருடன் அவர்கள் எந்தளவுக்கு பிணைந்துள்ளார்கள் என்பதையுமே தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
அத்துடன், நாட்டின் இரு பிரதான அரசியல் சக்திகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்து செயற்படுவது குறித்த கருத்துக்கள் வலுப்பெற்று வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியானது தொடர்ந்தும் ராஜபக்ஷக்களின் ஆதரவிலோ அல்லது அவர்களின் "மடியிலோ" தஞ்சமடைந்து செயற்படுமாயின், அக்கட்சிக்கு எதிர்காலத்தில் எவ்வித அரசியல் இருப்போ அல்லது முன்னேற்றமோ சாத்தியமில்லை.
எனவே, ஐ.தே.க ஆனது தனது தவறான அரசியல் நகர்வுகளைக் கைவிட்டு, சஜித் பிரேமதாச தலைமையிலான அணியுடன் இணைந்து சுத்தமான அரசியல் பயணத்திற்காக உடனடியாக அணிதிரள வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், அக் கட்சியுடன் இணைந்து எந்தவொரு நேர்மையான அரசியல் பயணத்தையும் முன்னெடுக்க முடியாது என்பது உறுதியாகும்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்ட ரீதியான நடவடிக்கைகளும், ஊழல் மற்றும் தவறுகளில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை வழங்கும் வேலைத்திட்டங்களும் திடீரென உருவானவை அல்ல.
இவை அனைத்தும் கடந்த 2015ஆம் ஆண்டு ‘நல்லாட்சி’ அரசாங்கக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் நேரடி விளைவுகளும் பெறுப்பேறுகளும் ஆகும்.
அன்று அந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களாக நின்று செயற்பட்டவர்கள் என்ற வகையில், அந்த விசாரணைகளின் தொடர்ச்சியாக இன்று குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படுவதைக் கண்டு உண்மையிலேயே மகிழ்ச்சியடைய முடிகிறது.
எனவே, நாட்டைக் சூறையாடிய திருடர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராகத் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த வேலைத்திட்டங்களுக்குக் கட்சி பேதமின்றி அனைவரும் முழுமையான ஆதரவையும் வழங்க வேண்டியது அவசியமாகும்.