(நமது நிருபர்)
இஸ்ரேலில் இலவச வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பெயர், உத்தியோகப்பூர்வ இலச்சினை மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றிப் பயன்படுத்தித் தகவல்களைத் திரட்டும் போலி இணையத்தளம் தொடர்பில் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பரப்பப்பட்டு வரும் இந்த மோசடி இணையத்தளம், இதுவொரு உத்தியோகப்பூர்வ ளுடுடீகுநு தளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆள்சேர்ப்புச் செயல்முறை எனப் பொதுமப்பகளை நம்ப வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி இணையத்தளத்தின் இணைப்பைப் பயன்படுத்துபவர்கள், ஒன்லைன் ஊடாக விண்ணப்பப் படிவமொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகப் பணியகம் தெரிவித்துள்ளது.
இப்பவடிவத்தின் ஊடாக முழுப் பெயர்,பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை, இலக்கம் பால் ,கையடக்கத் தொலைபேசி இலக்கம் போன்ற தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.
அனுமதியற்ற இத்தகைய இணையத்தளங்கள் ஊடாகத் தனிப்பட்ட விவரங்களை வழங்குவது, தனிநபர்களைப் பல்வேறு பாரிய ஆபத்துகளுக்கு உள்ளாக்கலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக, இணையவழித் திருட்டு அடையாளத் திருட்டு , ஆள்மாறாட்டம், மோசடியான தரவுச் சேகரிப்பு மற்றும் தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுதல் போன்ற அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி வலையமைப்பானது குறிப்பாக இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளை எதிர்நோக்கியுள்ள இளைஞர்களை இலக்கு வைத்துச் செயற்படுவதாகத் தெரிகிறது.
சந்தேகத்திற்கிடமான இணையத்தளங்கள், இணைப்புகள் அல்லது ஒன்லைன் விண்ணப்பப் படிவங்கள் ஊடாகத் தங்களது தனிப்பட்ட தகவல்களை வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள், விசேடமாக இஸ்ரேல் வேலைவாய்ப்புகளைத் தேடுவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மோசடிச் செயற்பாடு குறித்து இலங்கை கணினி அவசரத் தயாரிப்புக் குழுவிடம் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் வேலைவாய்ப்புகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.