Our Feeds


Tuesday, September 1, 2026

ShortNews

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை - அமைச்சர் லால்காந்த!


நாட்டில் தற்போது எந்தவொரு உணவுத் தட்டுப்பாடும் இல்லை என விவசாய, காணி, நீர்ப்பாசன மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

மாத்தளை மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், டின் மீன் மற்றும் பாசிப்பயறு இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதுடன், நுகர்வோருக்கு நிவாரண விலையில் அரிசியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், அரசாங்கம் பதவியேற்ற பின்னர் மீண்டும் நெல் கொள்வனவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏக்கருக்கு 60 புசல்கள் வரை நெல் விளைவிக்கும் விவசாயிகளுக்கு தற்போதுள்ள நெல் விலை போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிப்பதை விட, தற்போதுள்ள நிலத்திலிருந்து பெறப்படும் விளைச்சலை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

விசேட விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், முறையான நீர்ப்பாசன முகாமைத்துவம், உரிய நேரத்தில் பசளை இடுதல், களைக் கட்டுப்பாடு மற்றும் மேம்படுத்தப்பட்ட நெல் வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் நெல் விளைச்சலை கணிசமாக அதிகரிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மக்காச்சோளம் இறக்குமதியும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கான அரசாங்க நடவடிக்கைகளில் விவசாயிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் லால்காந்த கேட்டுக்கொண்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »