Our Feeds


Monday, September 21, 2026

Zameera

அனோஜனை பாதுகாக்க சுயாதீன சவூதி வழக்கறிஞர்களை நியமித்து சட்டப் போராட்டம் முன்னெடுக்க வேண்டும் – இம்ரான் மஹ்ரூப்


 (எம்.ஆர்.எம்.வசீம்)



அனோஜனை பாதுகாக்க அரசாங்கம் காலந்தாழ்த்தாது அனுபவம் வாய்ந்த சுயாதீன சவூதி வழக்கறிஞர்களை நியமித்து வலுவான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதேநேரம் ஜனாதிபதியும்   சவூதி அரேபிய மன்னருக்கு நேரடி இராஜதந்திர முறையீட்டை விடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.


சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனனை விடுவிப்பது  தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


நபிகள் நாயகத்தின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது எந்தவொரு மதத்தின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலோ வெளியிடப்படும் கருத்துகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.


ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மத விழுமியங்களை மதிப்பவன் என்ற ரீதியிலும் நபிகள் நாயகம்  குறித்து வெளியிடப்பட்ட தவறான மற்றும் அவதூறான கருத்துகளை நான் முற்றாக நிராகரிப்பதுடன், அதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன். 


அதேவேளையில், இச்சம்பவத்தின் பின்னணியை நாம் நடுநிலையோடு நோக்க வேண்டியுள்ளது. கல்முனைப் பகுதியில் இடம்பெற்ற நாய் ஒன்று தாக்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சில தீவிர சமூகவலைத்தள பதிவாளர்களிடையே மதவாத மோதல்கள் தீவிரமடைந்தன.


இந்த இணையவழி மதவாதப் பிரசாரங்களின் துரதிஷ்டவசமான விளைவாகவே, சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அனோஜன் சிவராசா என்ற இலங்கை இளைஞன் உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறான பிழையான கருத்தைப் பதிவிடக் காரணமானது.


எனினும், தான் செய்த தவறை உணர்ந்து சில நிமிடங்களிலேயே அப்பதிவை அவர் நீக்கியதுடன், பகிரங்க மன்னிப்பும் கோரியிருந்தார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சமாகும். 


சவூதி அரேபியாவின் அல்-அஹ்ஸா குற்றவியல் நீதிமன்றினால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசு தரப்பு மற்றும் பிரதிவாதி தரப்பு மேன்முறையீடுகளின் அடிப்படையில் தண்டனை மரண தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கின்றது.


ஓர் இலங்கை பிரஜையின் உயிரைப் பாதுகாப்பதற்காக தூதரக வழிமுறைகளில் தகவல்களைத் திரட்டி, சவூதி அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வரும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் பாராட்டும் அதேவேளையில், இவ்வழக்கைக் கையாண்டதில் வெளியுறவு அமைச்சின் செயல்பாடுகளில் உள்ள பல பாரதூரமான நிர்வாகக் குறைபாடுகளையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 


மேல்முறையீடு செய்வதால் தண்டனை குறைய வாய்ப்பு மிகவும் குறைவு என்றும், தண்டனை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது என்றும் சவூதி வழக்கறிஞர் எச்சரித்திருந்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அந்த ஆபத்து குறித்து தெளிவான வழிகாட்டல் வழங்கப்படாமல் மேல்முறையீட்டிற்கு ஊக்குவிக்கப்பட்டிருக்கிறது. 


ஆகஸ்ட் 24 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் நகல், நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஒரு நாள் முன்னதாகவே (செப்டம்பர் 16) குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


அத்துடன்  வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் கணக்கில் செலுத்தப்பட்ட 1.89 மில்லியன் ரூபா  சட்டக் கட்டணம் மற்றும் ஆஜரான வழக்கறிஞரின் விவரங்கள் குறித்து குடும்பத்திற்குத் தெளிவான தகவல்கள் அளிக்கப்படவில்லை. 



அதனால் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து தூதரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே, பாதிக்கப்பட்ட இளைஞரே குடும்பத்திற்குத் தொலைபேசியில் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. 


மரண தண்டனை செய்தி பரவியதையடுத்து, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த சிலர் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பரஸ்பரம் வெறுப்புப் பேச்சுகளிலும் மதவாத மோதல்களிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இது மிகவும் ஆபத்தானதும் துரதிஷ்டவசமானதுமான போக்காகும். அறியாமையினாலும் உணர்ச்சிவசப்பட்டும் பதிவிடும் கருத்துகள் வெளிநாடுகளில் வாழும் எமது இளைஞர்களின் உயிரையே பலிகடா ஆக்கும் என்பதை இரு சமூகப் பொதுமக்களும் உணர வேண்டும்


மீண்டும் இன்னொரு இலங்கை பிரஜை இதுபோன்ற சட்டப் பொறியில் சிக்குவதைத் தடுக்க அரசாங்கம் தனது அதிகாரத்திற்குட்பட்ட அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மூலம் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோருக்கு அந்நாடுகளின் கடுமைமிக்க தகவல் தொழில்நுட்ப மற்றும் மத அவமதிப்பு சட்டங்கள் குறித்து கட்டாய விழிப்புணர்வை வழங்க வேண்டும். மேலும், உள்நாட்டில் இணையவழியில் இன, மத வெறுப்புணர்வைத் தூண்டுவோருக்கு எதிராக சட்டத்தை தராதரமின்றி நடைமுறைப்படுத்தி சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். 


தற்போது சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் உள்ளதால், அரசாங்கம் காலந்தாழ்த்தாது அனுபவம் வாய்ந்த சுயாதீன சவூதி வழக்கறிஞர்களை நியமித்து வலுவான சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் ஜனாதிபதி, சவூதி அரேபிய மன்னருக்கு நேரடி இராஜதந்திர முறையீட்டை விடுக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் தனது தவறை உணர்ந்து உடனடியாகப் பதிவை நீக்கி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதையும், அவரது இள வயது மற்றும் குடும்பச் சூழலையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு மன்னிப்பு வழங்கி தாய்நாடு திரும்ப வழிவகை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் தனது உச்சகட்ட இராஜதந்திர முயற்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »