Our Feeds


Friday, September 18, 2026

Zameera

சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனு உத்தரவிற்கான திகதி அறிவிப்பு


 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக் கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது தொடர்பான உத்தரவு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


நீண்ட பரிசீலனைகளின் பின்னர் வாய்மொழிச் சமர்ப்பணங்களை முன்வைப்பது இன்று (18) நிறைவுற்றதைத் தொடர்ந்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் ரொஹான்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 


இன்றைய தினம் மனுதாரரான சுரேஷ் சலே சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் பதில் வாய்மொழிச் சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவுறுத்தப்பட்டன. 


அதனைத் தொடர்ந்து, எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் தரப்பினருக்கு உத்தரவிட்டது. 


அதன் பின்னர், இம்மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்ற உத்தரவும் இடைக்கால நிவாரணக் கோரிக்கைகள் தொடர்பான உத்தரவும் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் நீதியரசர்கள் குழாம் திகதியிட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »