இலங்கையின் தொழில்நுட்ப ஆற்றல்கள், அறிவு மற்றும் மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் நீண்டகாலப் பங்காண்மையைக் கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற உலகளாவிய பிரதான தகவல் அலுவலர்களின் மாநாட்டில் (Global CIO Forum) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 22 முதல் 24 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் இந்த மாநாட்டின் மூலம் அரசாங்கங்கள், தொழில்நுட்ப வர்த்தகத் துறை மற்றும் டிஜிட்டல் மாற்றத்துடன் தொடர்புடைய முன்னணி தகவல் தொழில்நுட்ப அலுவலர்கள் (CIOs) ஆகியோருடன் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, கிளவுட் தொழில்நுட்பங்கள், நிலைபேறான புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தலைமைத்துவத்தின் எதிர்காலம் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான சர்வதேச மட்டத்திலான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
“டிஜிட்டல் மாற்றம் பொதுமக்களின் வசதிக்காக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தொழில்நுட்பத்தின் ஊடாக மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அதேபோன்று, வாய்ப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துதல், பொதுச் சேவைகளை வலுப்படுத்துதல், பொருளாதாரப் பங்கேற்புக்கு ஆதரவளித்தல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் நன்மைகள் பரந்தளவில் பகிர்ந்துகொள்ளப்படுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
எமது நோக்கம் வெறுமனே முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமல்ல. இலங்கையின் தொழில்நுட்ப ஆற்றல்கள், அறிவு மற்றும் மனித மூலதனத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் நீண்டகாலப் பங்காண்மைகளைக் கட்டியெழுப்புவதே எமது பிரதான நோக்கமாகும்.South Asians & Diaspora
இதன்போது டிஜிட்டல் துறையில் காணப்படும் இடைவெளிகள் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதற்கோ அல்லது டிஜிட்டல் திறன்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கோ அவர் வாழும் இடம், அவருடைய வருமானம், மொழி அல்லது பாலினம் ஒரு தடையாக அமையாத சூழலை நாம் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான அணுகலைப் பெறுவதற்கும், டிஜிட்டல் திறன்களை அபிவிருத்தி செய்துகொள்வதற்கும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் முழுமையாகப் பங்கேற்பதற்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் இடைவெளியை மூடுவது என்பது வெறுமனே அணுகல் தொடர்பான விடயம் மட்டுமல்ல; தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பயன்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் பெண்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதும் அதில் உள்ளடங்குகிறது
தொழில்நுட்பம் மக்களுக்காகவும் மக்களின் நலனுக்காகவும் காணப்படும் ஒன்றாகும் என்பதை வலியுறுத்திய பிரதமர் அவர்கள், அதன் மூலம் இளைஞர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல், தொழில்முயற்சிகளை வலுப்படுத்துதல், பொதுச் சேவைகளை மேம்படுத்துதல் மற்றும் புத்தாக்கத்தை அபிவிருத்தி செய்தல் ஆகியவற்றின் ஊடாக தொழில்நுட்பத்தின் மூலம் அனைவரையும் உள்ளடக்கியதும் நிலைபேறானதுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.