(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிபாளர் சிரேஷ்ட பிரதிபொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் அருட்தந்தை சிரில் காமினி ஆகியேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி இரு மனுவையும் ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தரான சாந்த ஜயதிலக்க தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் திங்கட்கிழமை (28) பிரதம நீதியரசர் ப்ரீதிபத்மன் சூரசேன, நீதியரசர் அச்சல வெங்கப்புலி மற்றும் நீதியரசர் அர்ஜீன ஒபேசெக்கர ஆகிய மூவரடங்கிய நீதியரசர் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது மனுதாரரான சாந்த ஜயதிலக்க மன்றில் வி்டயங்களை முன்வைக்கையில், “ அருட்தந்தை சிரில் காமினியால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளன. அம்முறைப்பாட்டில் அசாத் மௌலானா வெளிப்படுத்திய விடயத்தின் ஒருபகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, குறித்த வெளிபடுத்தல் தனக்கு மின்னஞ்சல் மூலமாக கிடைத்ததாகவும் அருட்தந்தை சிரில் காமினி குறிப்பிட்டுள்ளார். அக்கூற்றிலுள்ள விடயங்களால் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மட்டுமன்றி உயர் நீதிமன்றத்திற்கும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
அச்சந்தர்ப்பத்தில், பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன மனுதாரரிடம் கேள்வியெழுப்புகையில், ” அருட்தந்தை சிறில் காமினி கூற்றினால் நீதிமன்றத்திற்கு எவ்வாறு அவமதிப்பு ஏற்படும்?" எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர், " கணம் நீதியரசர் அவர்களே! அருட்தந்தை சிறில் காமினியின் முறைப்பாட்டில் அசாத் மௌலானா என்பவரின் வெளிப்படுத்தலின் ஒருபகுதி உள்ளடங்கியுள்ளது. அது தனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அந்தக் கூற்றின் மூலம் நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
மீண்டும் மனுதாரரிடம் கேள்வியெழுப்பிய பிரதம நீதியரசர், "குற்றப்புலனாய்வுத் திணைக்களம் என்பது விசாரணைகளை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகும். அந்நிறுவனத்திற்கு முறைப்பாடொன்று சமர்ப்பிக்கப்பட்டால் அது விசாரணை செய்யப்பட வேண்டும். நீதிமன்றத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்துகிறது என உங்களால் கூறப்படும் இக்கூற்று இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குள் மட்டுமே இருந்தது. நீங்கள் இப்போது அதை இந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். இப்போது இங்கு ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள். இனி இவை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் செய்தியாக வரும். எனவே இப்போது நீங்களும் அதையேதானே செய்திருக்கிறீர்கள்? நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான ஒரு செயல்தானே இது?" எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர், "கணம் நீதியரசர் அவர்களே! நான் இந்த நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்கிறேன். பொதுமக்களின் பிரச்சினைகளை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து தீர்வுகளைக் காண வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளேன். வீதிகளில் போராடுவதோ, போராட்டங்கள் மூலம் தீர்வுகாண்பதோ பொருத்தமானதல்ல. எனவே ஒரு குடிமகனாக நீதிமன்றத்தின் கௌரவம் பாதுகாப்ப்பட வேண்டும் என நினைக்கிறேன். கடந்த வெள்ளிக்கிழமை இந்த நீதிமன்றம் எனக்கு வழங்கிய அறிவுறுத்தல்களை நான் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். அதை நான் சவாலுக்கு உட்படுத்தவில்லை. இந்த மனுவானது எனக்கு அந்த உத்தரவு கிடைப்பதற்கு முன்னரே தாக்கல் செய்யப்பட்டது" என்றும் தெரிவித்தார்.
மனுதாரர் முன்வைத்த விடயங்களை பரிசீலித்த மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு , இம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்ய தீர்மானித்தது. அதனைத் தொடர்ந்து, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியொன்றின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரரான சாந்த ஜயதிலக்க நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில், " கணம் நீதியரசர் அவர்களே... உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாடொன்றிற்கு அமைவாக, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை சட்டத்திற்குப் புறம்பானது என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் சமர்ப்பித்த சத்தியக் கடதாசிகள் மூலம் நீதிமன்றத்துக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றார்.
அங்கு மனுதாரரிடம் கேள்வியெழுப்பிய நீதியரசர், "அந்தச் சத்தியக் கடதாசியில் அடங்கியுள்ள விடயங்கள் பொய் என்றா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?" எனக் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த மனுதாரர், " கணம் நீதிபதிய அவர்களே!அந்தச் சத்தியக் கடதாசியில் உள்ளடங்கியுள்ள விடயம் நீதிமன்றத்ரைத அவமதிக்கும் வகையில் உள்ளது" என்றார்.
அச்சந்தர்ப்பத்தில் மனுதாரரை விளித்த பிரதம நீதியரசர், " அய்யா நீங்கள் அந்த வழக்கின் தரப்பினர் இல்லையே. குறித்த வழக்கின் தீர்ப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. நீங்கள் குறிப்பிடும் விடயம் குறித்து உயர் நீதிமன்றம் ஏற்கனவே பரிசீலித்திருக்கும். பரிசீலித்துதான் அந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அத்தீர்ப்பு தவறானது என உங்களால் வாதிட முடியாது" எனக் கூறினார். மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வு , அம்மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.