பாடசாலை பெயர், சின்னங்களை பயன்படுத்தும்
நிகழ்வுகளில் மதுபானம், போதைப்பொருளுக்கு தடை!பாடசாலைகளின் சின்னம் மற்றும் பெயர்களைப் பயன்படுத்தி பழைய மாணவர் சங்கங்கள் உட்பட அதனுடன் தொடர்புடைய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் விழா உபசாரங்களில் மதுபானம் அல்லது போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது மற்றும் விளம்பரப்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
விதியை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் அண்மையில் வெளியிடப்பட்ட 2026 10 எனும் இலக்கமுடைய புதிய சுற்றறிக்கைக்கு அமைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் இணைப் பாடத்திட்ட வழிகாட்டல் மற்றும் ஆலோசனைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள “நாடே ஒன்றுபட்டு” தேசிய செயல்பாட்டுத் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உள்ளூர் சுற்றுலா ஆராய்க
நாட்டின் முன்னணிப் பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் பெருமைமிக்க மாபெரும் கிரிக்கெட் போட்டிகளின் போது, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாவதாகப் பெற்றோர்களிடமிருந்து தொடர்ச்சியாகப் பல புகார்கள் எமக்குக் கிடைத்த வண்ணம் இருந்தன.
பாடசாலையின் சின்னத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் எந்தவொரு நிகழ்வும் உத்தியோகபூர்வ பாடசாலை விழாவாகவே கருதப்படும். எனவே, இவ்வாறான நிகழ்வுகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனை இனிவரும் காலங்களில் முற்றாகத் தடைசெய்யப்படும்.
இப்புதிய தீர்மானம் மற்றும் சுற்றறிக்கை விதிமுறைகள் பாடசாலை நிர்வாகங்களினாலும் ஏற்பாட்டாளர்களினாலும் முறையாகப் பின்பற்றப்படுகின்றவா என்பது குறித்து தீவிரமாகக் கண்காணிப்பதற்கு கல்வி அமைச்சு விசேட குழுக்களை நியமித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
