22வது திருத்தம் | உயர் நீதிமன்ற வியாக்கியானம்
செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும். - எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திற்கு முன் போராட்டம் நடத்த திட்டம்.22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலம் குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சபாநாயகர் அறிவிக்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த அமர்வு இடம்பெறும் வாரத்தில் இந்தத் திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எனினும், அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் அன்றைய தினத்தில், அதற்கு எதிராக பாராளுமன்றத்திற்கு முன்பாக மிகப்பெரிய அளவிலான போராட்டமொன்றை முன்னெடுக்கப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன், இவ்வாரம் ஆரம்பிக்கப்படவுள்ள சபை அமர்வுகளின் போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது தொடர்பில் தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளனர்.
எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றுதிரட்டி பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதுடன், இத்திருத்தத்திற்கு எதிராகப் பெருந்திரளான மக்களைக் கொழும்பிற்கு வரவழைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அரசாங்கம் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்ட நகர்வுகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழலில், இத்திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிப்படுத்தி வரும் தீவிர மௌனம் அரசியல் களத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.அரசியல் செய்திகளை வாசி
அரசாங்கத்தினால் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட நாள் முதல் இதுவரையான காலப்பகுதியில், அது குறித்து பாராளுமன்றத்திற்குள்ளோ அல்லது அதற்கு வெளியிலோ பிரதமர் ஹரிணி அமரசூரிய எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காது தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
