22 ஐ எளிதாக நிறைவேற்ற ராஜபக்ஷ - ரணிலின்
அரசியல் புத்தகப் பாடத்தை கடன் வாங்குகிறது அரசாங்கம் - சுவஸ்திகா காட்டம்.(நா.தனுஜா)
அரசியலமைப்புக்கான 22வது திருத்தத்தை எளிதாக நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ராஜபக்ஷ - ரணிலின் அரசியல் புத்தகத்திலிருந்து பாடங்களைக் கடன் வாங்கத் தொடங்கியிருக்கிறது என சிவில் சமூக செயற்பாட்டாளர் சுவஸ்திகா அருலிங்கம் விசனம் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் சுவஸ்திகா அருலிங்கம் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்தை எதிர்த்த சட்டத்தரணிகள், அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடி 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பு கோரப்படவேண்டும் என வாதிட்டனர். சர்வசன வாக்கெடுப்பு என்பது அரசியல் விவகாரங்கள் தொடர்பில் பொதுமக்கள் நேரடியாகத் தீர்மானம் மேற்கொள்வதாகும்.
ஒரு ஜனநாயக நாட்டில் தேர்தல்களைப் போலவே பொதுவாக்கெடுப்பும் எப்போதும் எதிர்பார்த்த முடிவுகளைத் தருவதில்லை. இருப்பினும் நீதித்துறையைப் பொறுத்தமட்டில், எமது எதிர்காலம் எவ்வாறு அமையவேண்டும் என்பதை ஐந்து நபர்கள் தீர்மானிப்பதை விட இது (சர்வச வாக்கெடுப்பு) மேலானதாகும்.
சர்வசன வாக்கெடுப்பைக் கோருவது என்பது ஒருவர் முன்வைக்கக்கூடிய ஜனநாயக ரீதியான கோரிக்கையாகும். எனவே இக்கோரிக்கையை முன்வைத்தமைக்காக எம்மை 'மக்கள் விரோதிகள்' எனக் கூறாதீர்கள்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினர் அரசியல் நேர்மை எனும் 'போலிக் கிரீடத்தை' அணிந்துகொண்டு, அரசியலமைப்புக்கான 22 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதனால் எனது அரசியல் பலவீனமடைந்துவிடாது. உண்மையில் இவ்விவகாரத்தை உற்றுநோக்குகையில், 22 ஆவது திருத்தத்தை எளிதாக நிறைவேற்றுவதை உறுதிசெய்வதற்காக தேசிய மக்கள் சக்தியானது ராஜபக்ஷ - ரணிலின் அரசியல் புத்தகத்திலிருந்து பாடங்களைக் கடன் வாங்கத் தொடங்கியிருக்கிறது என விசனம் வெளியிட்டுள்ளார்.
