Our Feeds


Wednesday, September 23, 2026

Zameera

பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு


 (நமது நிருபர்)


1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தைக் கொண்டுவரும் நோக்கில், முன்மொழியப்பட்டுள்ள அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாத்தல் சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.


இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ இழைக்கப்படும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அது தொடர்பான குற்றங்களிலிருந்து தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய சட்டக் கட்டமைப்பை உள்ளடக்கிய இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தை வெளியிடுமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன், ஏனைய நாடுகளில் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிடுவதற்கும், தயாரிப்பதற்கும் அல்லது வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இலங்கையின் நிலப்பரப்போ அல்லது அதன் மக்களோ பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதையும் இந்த முன்மொழியப்பட்டுள்ள சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது


பயங்கரவாதக் குற்றங்கள் குறித்து சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிதல், அடையாளம் காணல், கைது செய்தல், தடுப்புக் காவலில் வைத்தல் மற்றும் புலனாய்வு செய்தல் ஆகியவற்றுக்கான சட்ட நடைமுறைகளை இச்சட்டமூலம் வகுத்துள்ளது. 


மேலும், பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் எனத் தீர்மானிக்கப்படுபவர்களைக் தண்டிக்கவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் இது வழிவகை செய்கிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »