Our Feeds


Wednesday, September 23, 2026

ShortNews

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனநாயகத்திற்கு விரோதமானது - சஜித்!


அரசியலமைப்பின் 22ஆம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், அது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு அரசியலமைப்புத் திருத்தமாகும் என்ற நிலைப்பாட்டில்  ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக நிற்கின்றது. என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து  உரையாற்றுகையில்,

அரசியலமைப்பின் 22ஆம் திருத்தமானது ஒரு அரசியல் அலுகோசு திருத்தமாகும். ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமாகும். இதனை ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும், அரசியலமைப்பு ரீதியான சூழ்ச்சி என்றும் அழைக்கலாம். எனவே, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நான் நிராகரிக்கின்றேன். "வளமான நாடு, அழகான வாழ்க்கை" என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம்  நீதிமன்றத்திற்கு பெரும் மரண அடியை ஏற்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றது.

மேலும் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் இன்று பேசப்படுகின்றது.  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. எதிர்காத்திலும் அது மாறாது. இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொணர வேண்டும். உண்மையை வெளிக்கொணர்வதற்காக பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே நாங்கள் தெரிவித்து வருகிறோம்.

பாராளுமன்றத்திலும், வெளியேயும் கீழ்த்தரமான இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நான் ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்துள்ளேன். அவற்றை தான் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் மற்றும் அதன் பின்னணியில் திட்டங்களை வகுத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு  அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில்  எந்த வேலைத்திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. தேர்தல் காலத்தில் பட்டதாரிகள் குறித்த புள்ளிவிபரங்களை இவர்கள் நன்றாகத் தயாரித்து வைத்திருந்த போதிலும், தேர்தலின் பின்னர் அரசாங்கம் பட்டதாரிகளை மறந்துவிட்டது. சமகாலத்தில் ஜனாதிபதியையோ, பிரதமரையோ அல்லது அரசாங்கத்தின் அமைச்சர்களையோ இவர்களால் சந்திக்கக்கூட முடியாத நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு இப்போதாவது வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி கற்ற 15-24 வயதுக்குட்பட்டவர்களில் அதிகளவான வேலையின்மை விகிதம் நமது நாட்டில்தான் காணப்படுகின்றது. அது 43 சதவீதமாகும். நாணய நிதியத்தின் இந்தத் தரவுகளை அறிந்திருந்தும் அரசாங்கத்திற்கு இது பற்றித் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விடயமாக காணப்படுகின்றது. இது ஒரு பாரிய பேரழிவாகும். இனியாவது இந்த மோசமான அரசியலிலிருந்து விலகி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »