Our Feeds


Thursday, September 17, 2026

Zameera

ஞானசார தேரர் வழக்கை விரைவாக முடிக்க கோரிக்கை

 


( எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்ஷனி)



இஸ்லாம் மதத்தை  அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக  குற்றம்சாட்டி சட்டமா அதிபரால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை (16) தெரியப்படுத்தியிருந்தார்.


கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ஞானசார தேரரின் சட்டத்தரணியினால்   இந்த விடயம் நீதிமன்றத்துக்கு  தெரிவிக்கப்பட்டது.


வழக்கு விசாரணைகளுக்காக  புதன்கிழமை (16) பிரதிவாதியான கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதன்போது  பிரதிவாதி சார்பில் சட்டத்தரணி சஞ்சய மாரம்பேயுடன் ஆஜரான சட்டத்தரணி அசோக வீரசூரிய, தனது சேவைபெறுநரான ஞானசார தேரர் இந்த வழக்கு நடவடிக்கைகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர  எதி்ர்பார்ப்பதாக மன்றில் தெரிவித்தார்.


இது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விடயங்களை  முன்வைப்பதுக்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சட்டத்தரணி இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார். இது குறித்து நீதவான் எழுப்பியிருந்த நிலையில், பிரதிவாதியின் இந்த கோரிக்கைக்குத் தனது ஆட்சேபனை எதுவுமில்லை என்றும், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு எழுத்துப்பூர்வமான விளக்கங்களைச் சமர்ப்பிக்க   பிரதிவாதி தரப்புக்கு இயலுமை உள்ளதாக அரச தரப்பு  சட்டத்தரணி  மன்றில்  தெரிவித்திருந்தார்.



அதன்படி, எதிர்வரும் நாட்களில் சட்டமா அதிபருக்கு எழுத்துப்பூர்வ அறிக்கைகளைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார். மன்றில்  முன்வைக்கப்பட்ட இரு தரப்பு சாட்ச்சியங்களையும்  பரிசீலித்த நீதிவான், இவ்வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன், அன்றைய தினம் இது தொடர்பான முன்னேற்றங்களை நீதிமன்றத்துக்கு  அறிவிக்குமாறும் தரப்பினருக்கும் உத்தரவிட்டார்.


நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை உயர்நீதிமன்றம் அண்மையில் இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில்  புதன்கிழமை (16) ஞானசார தேரர் ஆமற்படி  வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »