Our Feeds


Friday, September 25, 2026

Zameera

இலங்கையின் தொழிற்கல்வித் துறையில் முதலீடு: ஐ.அ. இராச்சியம் விருப்பம்


 இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் (TVET) துறையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையில் பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (24) நடைபெற்றது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வளர்ந்து வரும் கைத்தொழில்களுக்குத் தேவையான திறன்மிக்க தொழிலாளர்களை உருவாக்குவதே இதன் பிரதான நோக்கமாகும். 


தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் இதன்போது விளக்கமளித்த பிரதமர், தொழிற்கல்விக்கான முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 


இளைஞர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தைகளை வெற்றிகரமாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், நவீன உலகின் தேவைகளுக்கு ஏற்ப தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியை நவீனமயப்படுத்துவதற்கும், அதற்காக முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக பிரதமர் மேலும் வலியுறுத்தினார். 


அரசாங்கம் முன்னெடுத்துவரும் இந்த வேலைத்திட்டத்தைப் பாராட்டிய ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதிநிதிகள் குழு, இலங்கையின் தொழிற்கல்வித் துறையின் அபிவிருத்திக்காக முதலீடு செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் தமது விருப்பத்தைத் தெரிவித்தனர். 


இதன்போது, இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயத் துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பிரதமர் பிரதிநிதிகள் குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். 


இரு நாடுகளுக்கும் இடையிலான திறன் விருத்தி, பயிற்சிபெற்ற தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், அத்துடன் எதிர்கால முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்புகளை உருவாக்குதல் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. 


இந்தச் சந்திப்பில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதியின் தனிப்பட்ட அலுவலகத்தின் (முதலீடு) தலைவர் மஹ்மூத் ஜசீம் அப்துல்லா அல் அலி, AYAT குழுமத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி நசார் அலி யஸ்லாம், HSH Real Estate நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சயீத் அல் ஹினாய், Green River LLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இமாத் அபேத் அல் ஹாதி, துபாயில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலெக்ஸி குணசேகர, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோர் கலந்துகொண்டனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »