Our Feeds


Friday, September 25, 2026

Zameera

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாக ஷிரந்தி கால அவகாசம் கோரிக்கை

 


(செ.சுபதர்ஷனி)


'சிரிலிய சவிய' அமைப்புக்கு தனியார் வங்கியொன்றினால் வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா தொடர்பான விசாரணைகளுக்கமைய, வியாழக்கிழமை (24) நீதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகத் தவறிய ஷிரந்தி ராஜபக்ஷ, தான் வைத்திய  சிகிச்சை பெற்றுவருவதால்  வாக்குமூலம் அளிப்பதற்கு மற்றொரு திகதியை  குறிப்பிடுமாறு கோரியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ அவர் தற்போது வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூரில் தங்கியுள்ளதால் தான் வாக்குமூலம் வழங்குவதற்கு  வேறொரு திகதியை வழங்குமாறு அவரது தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


'சிரிலிய சவிய' அமைப்புக்கு தனியார் வங்கியொன்றினால்  வழங்கப்பட்ட 10 மில்லியன் ரூபா நிதி  தொடர்பான  விசாரணைகளுக்கு அமைய ஷிரந்தி ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.  கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு  ஸ்கேன் இயந்திரம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதி பெறப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


'சிரிலிய சவிய' அமைப்பினால் விடுக்கப்பட்ட எழுத்து மூலக் கோரிக்கைக்கு அமையவே  தனியார்  வங்கி இந்த 10 மில்லியன் ரூபா பணத்தை நன்கொடையாக  வழங்கியுள்ளது.


எனினும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட சிரி ஸ்கேன்  இயந்திரமானது சீனா அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து,  தனியார்  வங்கியிடம் பெறப்பட்ட 10 மில்லியன் ரூபா பணத்துக்கு என்ன நடந்தது என்பது குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். அதற்கமைய குறித்த  நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக தனியார் வங்கியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை, 'சிரிலிய சவிய' கணக்கில் பணம் வைப்புச் செய்யப்பட்ட விதம் மற்றும் அதன் பின்னர் அந்த நிதி பயன்படுத்தப்பட்ட முறைமை குறித்து விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இவ்விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த 2026 பெப்ரவரி 3ஆம் திகதியும் ஷிரந்தி ராஜபக்ஷ நிதி  குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார். இதன்போது அவரிடம் 4 மணித்தியாலத்துக்கும் அதிக நேரம்  விசாரணை நடத்தப்பட்டிருந்தது. 


மேற்படி சம்பவம் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ஷவிடம் மேலதிக வாக்குமூலத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், தனக்கு உடலநலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தமையினால் கடந்த செப்டம்பர் 14ஆம் திகதி அவரிடம் வாக்குமூலத்தைப் பெற முடியாமல் போயிருந்ததோடு,  மீள செப்டம்பர் 24ஆம் திகதி நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.


மருத்துவ சிகிச்சைக்காக  கடந்த 16ஆம் திகதி நாட்டிலிருந்து வெளியேற தயாரான நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஷிரந்தி ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வு அதிகாரிகள்,  நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாவதற்கான எழுத்து மூல அறிவிப்பைக் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »